'கடல்சார் தளத்தில் இலங்கையின் ஆர்வத்தை ஊக்குவித்தல்: ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்' எனும் மெய்நிகர் மாநாட்டில் முக்கிய உரையை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக்க பாலசூரிய, இலங்கையின் கடல்சார் தளமானது இலங்கையின் வளர்ச்சித் திறனை வெளிப்படுத்தக்கூடியதும், அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' என்ற விஞ்ஞாபனததில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னுரிமைப் பகுதிகளை அடைந்து கொள்வதற்குமானதொரு முக்கிய அங்கமாகும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் பாலசூரிய, பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் எனத் தெரிவித்தார்.
அறிமுகக் கருத்துக்களை வழங்கிய வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, கடல் வளங்களில் முதலீடுகளை மேற்கொள்ள உதவும் புதிய பொருளாதாரக் கண்ணோட்டத்தின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். நாடுகளுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சமச்சீரற்ற தன்மைகள், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை, மற்றும் மிக முக்கியமாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல் மற்றும் பொருட்கள் பரிமாற்ற மையமாக மாறுவதற்கான இலங்கையின் லட்சியத்தை அடைவதறகான விதிகள் சார்ந்த கடல்சார் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கும் செயலாளர் கொலம்பகே அழைப்பு விடுத்தார்.
'கடல்சார் தளத்தில் இலங்கையின் ஆர்வத்தை ஊக்குவித்தல்: ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்' என்ற தலைப்பிலான மெய்நிகர் மாநாட்டை இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியததின் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் நடாத்தியது. சிக்கலான கடல்சார் நிலப்பரப்பின் நீடித்த தன்மையை உறுதி செய்வதற்கும், கடல் சார்ந்த பொருளாதாரம், கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கள் மற்றும் கடல் நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்குவதற்கும் இலங்கை பின்பற்ற வேண்டிய உத்திகள் இந்த மாநாட்டில் ஆராயப்பட்டன.
கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருட்கள் பரிமாற்ற மையங்கள், கடல் பல்லுயிர் மற்றும் வாழ்வாதாரங்கள் மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் அதன் மூலோபாய இருப்பிடத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் மற்றும் சவால்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக, இந்த மாநாடு பிரபல்யமான பேச்சாளர்களை ஒன்றிணைத்தது.
தொடக்கக் கருத்தை நிகழ்த்திய தூதுவர் டெனிஸ் சைபி, பிராந்திய ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் வளர்க்கும் நாடுகள் சர்வதேச சமூகத்தை பற்றுறுதியூட்டுவதற்காக அதிக வாய்ப்பைக் கொண்டுள்ளதுன், அவை ஒரு சக்தியை மற்றொன்றுக்கு மேல் தெரிவு செய்ய வேண்டியதில்லை எனக் குறிப்பிட்டார். கடல் சார்ந்த வளங்களைப் பயன்படுத்துவதற்கும், கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் விதி அடிப்படையிலான கடல் நிர்வாகத்தின் முக்கியத்துவம் ஒரு முன்நிபந்தனையாகக் குறிப்பிடப்பட்டது. பரஸ்பரம் புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் பிராந்திய ஒத்துழைப்பை அடைவது எளிதானதல்ல என அவர் வலியுறுத்தினார். கடல்சார் வர்த்தகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு முயற்சிகள் உட்பட நிலையான அபிவிருத்தியில் இலங்கையை ஆதரிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது நிபுணத்துவத்தை விரிவுபடுத்துவதற்குத் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.
இலங்கை குறித்து கருத்துத் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒரு முக்கியமான மற்றும் நீண்டகால வர்த்தக மற்றும் அபிவிருத்திப் பங்காளியாகவும், இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் உள்ளதாக வெளிநாட்டு அமைச்சின் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. தம்மிகா சேமசிங்க தெரிவித்தார். கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் உறவு செயற்றிறன் மற்றும் ஆற்றல் மிக்கதும், வலுவானதுமாவதுடன், இது வழக்கமான இடைத்தொடர்புகள் மற்றும் இரு தரப்பினரும் நில யதார்த்தங்களைப் பற்றிய அதிகமான புரிதல்களால் குறிக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருட்கள் பரிமாற்ற மையத்திற்கான முதலாவது குழுவானது, பொருட்கள் பரிமாற்ற மற்றும் போக்குவரத்திற்கான பெண்களின் உலகளாவிய தலைவரான திருமதி. கயானி டி அல்விஸ் அவர்களால் நிர்வகிக்கப்பட்டதுடன், அதில் சவுத் ஏசியா கேட்வே டேர்மினல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு. ரொமேஷ் டேவிட், எஸ்.சி.எம். பிளஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் ஸ்தாபகரும், பேர்ன்ஹார்ட் ஷுல்ட் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் விநியோகச் சங்கிலி முகாமைத்துவத்தின் முன்னாள் நிறுவனப் பணிப்பாளருமான கலாநிதி. ருவந்தி டி சில்வா மற்றும் ஷிப்பர்ஸ் அக்கடமி கொழும்பின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு. ரொஹான் மஸ்கோரல ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
கடல் பல்லுயிர் மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த குழுவை, வயம்ப பல்கலைக்கழகத்தின் மீன்வளர்ப்பு மற்றும் மீன்வளத் திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. செவ்வந்தி ஜயக்கொடி நிர்வகித்தார். குழுவில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியின் முகாமைத்துவத்திற்கான பணிப்பாளர் திரு. மஜூல அமரரத்ன, ஐரோப்பிய ஆணைக்குழுவின் பொது சுற்றுச்சூழல் பணியகத்தின் பல்லுயிர் அலகின் கொள்கை உத்தியோகத்தர் திரு. ஜுவான்-பப்லோ பேர்டிரெரா, ப்ளு ரிசோர்ஸ் ட்ரஸ்ட்டின் இணை ஸ்தாபகர் திரு. டேனியல் பெர்னாண்டோ மற்றும் என்வயர்மென்டல் பவுன்டேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், டபிள்யு.டபிள்யு.எஃப். ஹொங்கொங்கின் ஈரநிலம் மற்றும் வனவிலங்குக்கான பணிப்பாளருமான கலாநிதி. எரிக் விக்ரமநாயக்க ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மூன்றாவது குழுவை வெளியுறவு செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே நிர்வகித்தார். இலங்கைக் கடற்படையின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாயகமும், தலைமை நீரளவையியலாளரும் மற்றும் இலங்கை அரசசாங்கத்திற்கான இணைந்த தலைமை நீரளவையியலாளருமான வை.என். ஜயரத்ன, உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டம், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் தலைவர் திரு. அலன் கோல், ஐரோப்பிய ஒன்றியக் கடற்படையின் பிரதித் தளபதி ரியர் அட்மிரல் கொராடோ கம்பனா, ஐரோப்பிய ஒன்றியத் திட்டம், இந்து சமுத்திரத்தின் சிக்கலான கடல் வழிகளின் குழுத் தலைவர் கேர்னல் (ஓய்வு பெற்ற) மார்ட்டின் கவுச்சி இங்க்லொட் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.
மூன்று குழுக்களையும் நிறைவு செய்யும் கருத்துரைகளை சுருக்கமாக பணிப்பாளர் நாயகம் திருமதி. திசாநாயக்க நிகழ்த்தியதுடன், பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திருமதி. சாவித்ரி பானபொக்க அவர்கள் நன்றியுரையை நிகழ்த்தினார்.
இந்த மெய்நிகர் மாநாட்டில் தூதுவர்கள், அறிஞர்கள், அரசாங்க அதிகாரிகள், தனியார் துறை உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு




















