இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க மாட்டோம்

இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க மாட்டோம்
  • :

• இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அன்றி ஒரு மனிதாபிமான கடமையாகும்.

• ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்

- தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை வௌியிட்டு வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால், அதிகார பொறிமுறையும் விரைவில் சரியான பாதைக்கு திரும்ப வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அதற்காக இதுவரையான 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாகவும்,அதிகாரிகளின் பொறிமுறை சரியாகாத பட்சத்தில், எதிர்வரும் மே மாதத்திற்குப் பிறகு அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பின்வாங்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (09) நடைபெற்ற "தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029" வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் அரச நிறுவன கட்டமைப்பின் கௌரவம் மற்றும் பெறுமதிகளை அழித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் ஆட்சி செய்வதாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் அரச சேவையில் எந்தவொரு பகுதியும் சரிவதற்கு இடமளிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதிகாரிகள் பொறிமுறை இனியும் மாறத் தயாராக இல்லையெனில், மே மாதத்திற்குப் பிறகு அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இலஞ்ச மற்றும் ஊழல் குற்றங்கள் காரணமாக உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பல தசாப்தங்களாக பின்தங்கியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியல் பழிவாங்கல் அன்றி, மனிதாபிமான கடமை என்பதையும் வலியுறுத்தினார்.

சட்டத்தை மதிக்கும், சட்டத்திற்கு அஞ்சும் சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும், இதற்கு கருத்தரங்குகளும், பயிற்சி பட்டறைகளும் மாத்திரம் போதாது என்றும், குற்றமொன்றிற்கு தண்டனை வழங்கப்படுமென நடைமுறையில் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

கிராமத்தில் மண் வீதியில் ஆரம்பித்த இலஞ்சம் மற்றும் ஊழல், பிரஜைகளை கண் பார்வை இழக்கச் செய்யும் மருந்துப் பொருட்களைக் கொண்டுவருவது வரையிலும், எளிய இடங்களில் ஆரம்பித்த இலஞ்சம் மற்றும் ஊழல் உச்சகட்ட மனிதாபிமானமற்ற நிலைமை வரையிலும், பிரதேச சபை முதல் மத்திய வங்கியில் திருடித் தின்பது வரையிலும் பரவியிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி முன்னைய ஆட்சியாளர்கள் அந்த நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அளித்தனர் என்பதையும் நினைவுபடுத்தினார்.

பொது நிர்வாக நிறுவனங்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில் சிலர் மற்றும் ஆயுத குற்றக் கும்பலும் உள்ளடங்கியதான இலஞ்சம் மற்றும் ஊழலை செய்யும் திருடர்களின் வளையம்பொன்று உருவாகியுள்ளதாகவும், அதனை தற்போது அடையாளம் காண்டிருப்பதாகவும் எதிர்காலத்தில் அதற்கான தீர்வுகள் செயல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொறுப்பை அடுத்த தலைமுறையின் மீது சாட்டாமல், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதற்கு தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கைக்கு ஒரு வருடத்திற்கு முன்பாக சுதந்திரம் பெற்ற இந்தியா, தேசிய நிகழ்ச்சி நிரலுடன் முன்னேறியதன் பலனாக விண்வெளி மற்றும் மென்பொருள் துறைகளில் பெருமளவான சிரமப் படையினை உருவாக்கியுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கையின் அரசியல் அதிகார தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களினால் 2022 ஆம் ஆண்டில் இலங்கை வங்குரோத்து நாடாக மாறியது என்றும் கூறினார்.

மக்களின் ஒவ்வொரு ரூபாய்க்கும் பொறுப்புக்கூறும் வகையில் தேசிய நிகழ்ச்சி நிரலின் மூலம் இலங்கையை உலக நாடுகளுக்கு முன்பாக உயர்த்தி வைக்கும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அவ்வாறு செய்வதன் மூலம் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மீது பிரஜைகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும், குற்றத்தை செய்துவிட்டு சட்டத்திலிருந்து தப்பிக்க வழியில்லை என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

"தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029" ஊடாக நாட்டை "வளமான தேசத்தை நோக்கி" கொண்டு செல்வதே நோக்கமாகும் என்பதுடன், ஜனாதிபதி செயலகம் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களிலும் உள் விவகார பிரிவுகளை நிறுவி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அதைக் கண்காணிக்கக்கூடிய ஒரு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கல்வி மற்றும் சமூக பங்களிப்பு, நிறுவனங்களை வலுப்படுத்தல் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், சட்டம் மற்றும் கொள்கை சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு இடமளிக்கும் மூலோபாய முன்னுரிமைத் துறைகளுக்காக இந்த செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டியது முக்கியமானதாகும்,இலங்கைக்குள் அந்த பொறிமுறையை மிகவும் வலுப்படுத்தக்கூடிய முன்னணி அரச நிறுவனமாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை கூறலாம்.

அதன்படி, இலஞ்சம் இல்லாத சமூகத்தை உருவாக்க, அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் ஒரு வலுவான தேசிய ஊழல் எதிர்ப்புக் கொள்கையை உருவாக்க வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தேசிய செயல் திட்டத்தை தயாரிக்கும்போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, அனைத்து பங்குதாரர்களினதும் ஆதரவுடன், தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், மூன்று மொழிகளிலுமான பத்திரிகை

விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஊழல் பிரச்சினைகள் குறித்த பொதுமக்களின் கருத்தை மதிப்பீடு செய்வதற்காக நடத்தப்பட்ட விரிவான கணக்கெடுப்பும் அதற்குள் அடங்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், அரச அதிகாரிகள், தனியார் துறை, சர்வதேச அமைப்புகள்,சிவில் அமைப்புகள்.சமூக அமைப்புகள், மதக் குழுக்கள், பல்வேறு தேவைகள் உள்ள குழுக்கள்,ஊடகம்,இளைஞர்கள்,சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் அனுபவங்கள், மற்றும் சகல மாகாணங்களில் உள்ள பல்வேறு குழுக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பரிந்துரைகள் ஆகியவை தேசிய செயல் திட்டத்தை தயாரிப்பதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், ஊழலுக்கு எதிராகப் போராடும், ஊழலை நிராகரிக்கும் பிரஜைகள் குழு, ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அனைத்து வழிகளிலும் ஆதரிக்கும் அரசியல் விருப்பம், சட்டத்தை செயல்படுத்த தேவையான அனைத்து பின்னணிகள் மற்றும் அரச சேவையுடன் அனைத்து துறைகளிலும் நேர்மைத்திறனை ஏற்படுத்தி, எதிர்கால சந்ததிக்கு நேர்மைத் திறனான நாட்டை உருவாக்க அனைவரினதும் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசமோட்டோவும் இந்த நிகழ்வில் உரையாற்றினார். முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் இலங்கையிலிருந்து தூரமான முதலீட்டாளர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்கள் காரணமாக தற்போது இலங்கையை நெருங்கி வருவதாகக் தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி என்பன நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு அடிப்படை தூண்கள் என்று ஜப்பான் உறுதியாக நம்புவதால், உலகம் முழுவதும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஜப்பான் ஆதரிப்பதாகவும் ஜப்பானிய தூதுவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான ஐ.நா அபிவிருத்தித் திட்டப் பிரதிநிதி அசுசா கொபோடாவும் இந்த நிகழ்வில் உரையாற்றினார். கடந்த ஆண்டு இலங்கையின் முதல் தேசிய வரி செலுத்துவோர் தொடர்பான தொகை மதிப்பின் படி, 84% வீதமானோர் வரி செலுத்தும் விருப்பத்தை ஊழல் நேரடியாக பாதிக்கிறது என்று குறிப்பிட்டனர். ஊழல் முதலீட்டைத் தடுக்கிறது என்றும் வர்த்தகம் செய்வதற்கான செலவை

அதிகரிக்கிறது எனவும் நிலையான அபிவிருத்தி மற்றும் மனித பாதுகாப்பை தடுக்கிறது என்றும் ஊழல் காரணமாக வளர்ந்து வரும் நாடுகள் ஆண்டுதோறும் 1.3 டிரில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்கின்றன என்றும் கொபோடா சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியது போல, வரி செலுத்துவோரின் ஒவ்வொரு சதத்திற்கும் அரச பொறுப்பேற்க வேண்டும் என்கின்ற இந்த செயல் திட்டம், இலங்கை சமூகத்தின் மாற்றத்திற்கான ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பிரதம நீதியரசர் முர்து நிருபா பிந்துஷினி பெர்னாண்டோ, சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் நீல் இத்தவெல, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

09-04-2025

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]