நாடு எனும் ரீதியில் முன்னேறிச் செல்ல வேண்டுமாயின் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்று அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான, வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், கலாச்சார நிகழ்வுகள் இனங்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்த வழிவகுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் உரையாற்றுகையில், செய்தி ஒன்றின் நம்பகத்தன்மையினை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஊடகவியலாளர்களைச் சாரும் என்றும், முஸ்லிம்களின் வேத நூலான புனித அல்குர்ஆனிலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
இந்நிகழ்வானது, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவின் பூரண வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் நாட்டில் முன்னணியில் திகழும் பல முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். முஸ்லிம் எய்ட் நிறுவனமும் கின்னியாவில் இயங்கும் குளோபல் எஹ்ஸான் ரிலீப் நிறுவனமும் இந்நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்தனர்.