தேசிய நேர்மை வாரம் நாளையில் இருந்து ஆரம்பம்

தேசிய நேர்மை வாரம் நாளையில் இருந்து ஆரம்பம்
  • :

 

 

"நேர்மையான கலாச்சாரம் - கிளீன் ஶ்ரீலங்கா" தேசிய நேர்மை வாரம் நாளை ஆரம்பம் ; நேர்மைப் பிரமாணம் நாளை காலை 9 மணிக்கு

"நேர்மையான கலாச்சாரம் - கிளீன் ஶ்ரீலங்கா" என்ற தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நேர்மை வாரம் நாளை (ஜூலை 27) முதல் ஜூலை 31 வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன.

"தேசிய நேர்மை வாரம்" நாளை காலை 9.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களிலும் 'தேசிய நேர்மை பிரமாணம்' வழங்குதல் மற்றும் 'நன்னடத்தை விதிகள்' என்பவற்றை வெளியிடுவதன் மூலம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இவ்வாரத்தை பிரகடனப்படுத்துவதன் முக்கிய நோக்கம், நாட்டின் அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதாகும்.
இங்கு 'நேர்மை ' (Integrity) என்பது சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு மற்றும் சுய கண்காணிப்புடன், மனசாட்சிக்கு உடன்பட்டு, சரியான, வெளிப்படைத்தன்மை மற்றும் தார்மீக ரீதியில் தனது சேவையை வழங்குவதைக் குறிக்கிறது.

அதற்கமைய, இந்த தேசிய நேர்மை வாரம் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது:

• ஜூலை 27: நிறுவன ரீதியான நேர்மையினை மேம்படுத்தல்.

• ஜூலை 28: நிதி, டிஜிட்டல், தொழில்முயற்சி மற்றும் தொழில்நுட்ப ரீதியான நேர்மையினை மேம்படுத்தல்.

• ஜூலை 29: ஆன்மீக, தார்மீக, கலாச்சார மற்றும் சமூக ரீதியான நேர்மையினை மேம்படுத்தல்.

• ஜூலை 30: செயற்பாட்டு, உட்கட்டமைப்பு, சேவை வழங்கல் மற்றும் உழைப்புசார் நேர்மையை மேம்படுத்தல்.

• ஜூலை 31: சுற்றுச்சூழல், வள முகாமைத்துவம், கிராமிய மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மை மேம்படுத்தல்.

ஜனாதிபதி அலுவலகத்தின் வழிகாட்டலின் கீழ் ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள "உள்ளக அலுவல்கள் பிரிவு" ஊடாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் அல்லது ஊழல் செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும். பொதுமக்கள் QR குறியீடுகள், மின்னஞ்சல் (Email), கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் அல்லது வலைத்தளச் செய்திகள் ஊடாக தமது முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம். அத்துடன், அந்த முறைப்பாடுகள் தொடர்பாக நிறுவனத் தலைவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக5555ttt5⁵tt5⁵⁵⁵ ஜனாதிபதி அலுவலகத்தினால் விசேட டிஜிட்டல் கட்டமைப்பும் செயற்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 31 ஆம் திகதிக்குப் பின்னர், டிசம்பர் 31 ஆம் திகதி வரை இத்திட்டம் அனைத்து அரச மற்றும் அரை அரச நிறுவனங்களிலும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது..

Related Articles