இங்கு விளக்கமளித்த அமைச்சின் செயலாளர், தற்பொழுது அதிகம் பயன்படுத்தப்படும் 14 தொழிலாளர் சட்டங்களையும் மறுசீரமைப்பது குறித்து ஆராய்வதற்காக 17 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தக் குழு முதற் கட்டமாகக் கூடிக் கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதுடன், தொழிலாளர் தொடர்பில் பிரதானமாக 4 சட்டமூலங்களை தயாரிப்பதற்கு முதற்கட்டமாக இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். தொழிற்சங்கங்கள், ஊழியம், தொழில் பாதுகாப்பு மற்றும் பணிநீக்கம் போன்ற நான்கு விடயங்களுக்கும் ஒவ்வொரு சட்டமூலங்களைத் தயாரிப்பதற்கு குறித்த குழுவில் இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். புதிய சட்டங்கள் இயற்றப்படும்வரை நடைமுறையில் உள்ள சட்டங்களில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பெண்கள் இரவு நேரங்களில் பணியாற்றுவது குறித்த சட்டம், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம், தற்காலிகமாக வேலையிலிருந்து நிறுத்தப்படும்போதான காப்புறுதி தொடர்பான விடயங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்படவிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.


