கண்டி எசல பெரஹரா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

கண்டி எசல பெரஹரா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்
  • :

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹரா - 2026 ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (24) முற்பகல் நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவை விமர்சையாக நடத்துவதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்தும் அதற்கான தயார்நிலை மற்றும் பெரஹரா ஏற்பாடுகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

 

பெரஹராவை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனுசரணை வழங்கும் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் நிதி அனுசரணை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பங்களிப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 

பெரஹராவைக் காண்பதற்காக வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான நீர், மின்சாரம், சுகாதார வசதிகள், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்தும், பெரஹராவிற்கு யானைகளைச் பெற்றுக்கொள்வது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

 

கண்டி எசல பெரஹராவை மிகவும் வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான அதிகபட்ச ஆதரவையும் தலையீட்டையும் அரசாங்கம் வழங்கும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.

 

மத்திய மலைநாட்டின் மிகப்பெரிய சமய மற்றும் கலாசார நிகழ்விற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிவரும் பங்களிப்பிற்கு மல்வத்து மற்றும் அஸ்கிரிய ஆகிய இரு தரப்பு ஆசிகளும் கிடைக்கும் என மல்வத்து மகா விகாரையின் முதன்மைப் பதிவாளர் வண, கலாநிதி பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் தெரிவித்தார்.

 

இம்முறை கும்பல் பெரஹரா, ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், ரந்தோலி பெரஹரா, ஆகஸ்ட் 23 ஆம் திகதி முதல் நடைபெறும். இறுதி மகா ரந்தோலி பெரஹரா 27 ஆம் திகதி இரவு வீதி உலா வரும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28 ஆம் திகதி அதிகாலை “திய கெப்பீம” சம்பிரதாய நிகழ்வு நடைபெற்ற பின்னர், அன்றைய தினம் பகல் பெரஹரா, வீதி உலா வருவதுடன் எசல பெரஹரா நிறைவடையும்.

 

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் இஷான் விஜேதிலக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, 

 

 

 

 

மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜி. எச். எம். ஏ. பிரேமசிங்க, பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் காமினி சேனாரத்ன, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விதானஆரச்சி, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த, மத்திய மாகாண கல்விச் செயலாளர் மதுபானி பியசேன, கண்டி பிரதேச செயலாளர் அமில நவரத்ன, கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா குமாரி ஆகியோருடன், அரச நிறுவனங்களின் அதிகாரிகள், அனுசரணை நிறுவனங்களின் அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவினரின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2026-07-24

Related Articles