இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள ஆய்வை நடைமுறைப்படுத்தும் வழிமுறை, அதற்கான கால அட்டவணை மற்றும் ஒருங்கிணைப்புக் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப்) நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உபகுழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம தலைமையில் குறித்த உபகுழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
ஆய்வை நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள நிறுவன செயற்பாட்டுக் குழு (Institutional Operations Committee) மற்றும் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை (Six-member Coordination Team) நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படவுள்ள கலப்பு ஆய்வு முறையியல் (Mixed-Methods Design), வினாக்கொத்துகளைத் தயாரித்தல் மற்றும் தரவுகளைச் சேகரிக்கும் செயன்முறை தொடர்பிலும் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை, இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பது தொடர்பில் உபகுழுவினால் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஆய்வுடன் தொடர்புடைய மனித வள மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமை (MIS) பிரிவுகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது, ஆய்வின் செயற்பாட்டு கால அட்டவணையை (Gantt Chart) தயாரித்தல் மற்றும் கைத்தொழில் துறையின் பங்குதாரர்களுடன் நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், வர்த்தக சம்மேளனங்கள், கைத்தொழில் சங்கங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட SLIATE நிறுவனங்களில் கள ஆய்வுப் பயணங்களை (Field Visits) மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
ஆய்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைக்கு அமைவாக நடைமுறைப்படுத்துவதுடன், அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்து முன்வைக்கவும் உபகுழு தீர்மானித்தது.
இந்த உபகுழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்கவும் கலந்துகொண்டார்.


