பூரண மனிதநேயத்தை நோக்கி பயணிப்பதற்கு, தன்னைப் பற்றியும், பிறரைப் பற்றியும், இயற்கையைப் பற்றியும் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அறிவு மாத்திரமன்றி இதயமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என இலங்கைப் பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தெரிவித்தார்.
‘நான்’ என்ற கருத்தை விட ‘நாம்’ என்ற கருத்தில் ஒத்துழைப்பு, அன்பு, கருணை மற்றும் பரிவுணர்வு ஆகியன காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிரிபத்கொட விஹாரமஹாதேவி மகளிர் வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே குழுக்களின் பிரதித் தவிசாளர் இதனைத் தெரிவித்தார்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அனுபவத்தையும் ஜனநாயக ஆட்சி முறையின் செயற்பாடுகள் தொடர்பான புரிதலையும் மாணவியருக்கு வழங்கும் நோக்கில் கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த குழுக்களின் பிரதித் தவிசாளர், கல்வியின் ஊடாக பிள்ளைகளுக்கு சமூகத்துடன் இணைந்து செயற்படும் திறன், விழுமியங்களை அடையாளம் காணும் திறன் மற்றும் பொறுப்புமிக்க பிரஜைகளாக வளர்வதற்குத் தேவையான திறன்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் கருத்துக்களை மேற்கோள் காட்டிய அவர், மனிதனின் பூரணத்துவத்திற்காக தனக்கும், பிறருக்கும் மற்றும் இயற்கைக்கும் இடையிலான உறவுகளைச் சிறந்த முறையில் பேணுவது அத்தியாவசியமானது என வலியுறுத்தினார்.
இந்த உறவுகள் சீர்குலைவதன் காரணமாக தனிநபர்களிடையே தன்னம்பிக்கை வீழ்ச்சி, சமூகத்தில் அவநம்பிக்கை, வெறுப்பு மற்றும் மோதல்கள் அதிகரித்தல், அத்துடன் சுற்றுச்சூழல் அழிவு மற்றும் காலநிலை நெருக்கடி தீவிரமடைதல் போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டின் மொத்த சனத்தொகையிலும் வாக்காளர்களிலும் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருப்பதால், உள்ளூராட்சி நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றில் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்கும் வகையில் மாணவிகள் தயாராக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஜனநாயக விழுமியங்களை நடைமுறையில் அனுபவிப்பதற்கான முக்கியமான வாய்ப்பாக மாணவர் பாராளுமன்றம் அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதேநேரம், “எதிர்காலத் தலைமைத்துவமும் மாணவர் பாராளுமன்றமும்” என்ற தலைப்பில் உரையாற்றிய இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, ஜனநாயகம், மக்கள் இறைமை, பாராளுமன்றத்தின் வகிபாகம், சட்டவாக்கச் செயன்முறை, குழுக்கள், பாராளுமன்ற ஒன்றியங்கள், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கத்தை வழங்கினார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் விளக்கமளித்ததுடன், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான சேவைகளை பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர் பாராளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதுடன், உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். மேலும், மாணவர் அமைச்சர்களினால் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், பாடசாலை அதிபர் திருமதி எம். எல். என். எம். தமயந்தியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
ஜனாதிபதி செயலகமும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்து வரும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத் தொடரின் மற்றுமொரு நிகழ்ச்சியாக இந்த நிகழ்வு வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜனாதிபதியின் மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படைகள் ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நதீக தங்கொல்ல, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி உள்ளிட்ட அதிகாரிகள்,
விஹாரமஹாதேவி மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


