சிறுபோக நெல் அறுவடை, நெல் கொள்வனவு மற்றும் விவசாய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த கிளிநொச்சி மாவட்டத்திற்கான 2026 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது விவசாய குழுக்கூட்டம்

  • :

 

கிளிநொச்சி மாவட்டத்திற்கான 2026 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது விவசாய குழுக்கூட்டம் நேற்று முன்தினம் 22.07.2026 மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 

இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று கருத்து தெரிவிக்கையில் , சிறுபோக விவசாய நடவடிக்கைகளின் அறுவடை மற்றும் நெற் கொள்வனவு தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவித்தார். 

தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்ப்பாசனத்திணைக்களத்தால் விவசாய நடவடிக்கைகளுக்காக பராமரிக்கப்பட்டு நீர் வழங்கப்பட்டு வரும் குளங்கள் மற்றும் அவை தொடர்பாக எதிர்நோக்கப்படும் சவால்கள் தொடர்பாக கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டதுடன், குறித்த கமக்கார அமைப்புக்கள் அந்தந்த அமைப்புக்களால் எடுக்கப்படும் பயிர்ச்செய்கை குழு தீர்மானங்களை நேர்மையான வழியில் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

மேலும் விவசாயிகள் எஞ்சிய நெற்பயிர்களை அறுவடை செய்வதற்கான நீர்ப்பாசனத்தை வழங்குமாறு கோரியபோது நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் நீரை மிக சிக்கனமாக பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கியதுடன்,தேவையான நீரை வழங்க இணக்கம் தெரிவித்தனர்.

 

கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் அவர்கள் 2026 சிறுபோக பயிர்ச்செய்கை இலக்கு, 2026 இல் சிறுபோக விவசாய நடவடிக்கைக்காக விவசாயிகளுக்கு வைப்பிலிடப்பட்ட பணம் , 2026 சிறுபோகத்தில் அரச மற்றும் தனியார் கம்பனிகளிடமிருந்துகொள்வனவு செய்யப்பட்ட யூரியா பசளை தொடர்பான விபரங்கள் தொடர்பாக விளக்கமளித்தார்.

 

அதனைத் தொடர்ந்து மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அவர்களால் எல் நினோ காலநிலை மாற்றமும் பயிர்ச்செய்கையில் அதன் தாக்கங்களும் தொடர்பாக விரிவாக விழிப்புணர்வு தகவல்களை வழங்கினார் , கடுமையான வெப்பநிலை காணப்படுவதால் மக்கள் நீரை சிக்கனமாகவும் மாசுபடுத்தாது பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டதுடன், இந்துசமுத்திரத்தில் எல் நினோ காலநிலை மாற்றம் தொடர்பான எதிர்வுகூறல்கள், மழைவீழ்ச்சி மாறுபாடு குறித்த முன்னறிவித்தல்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட விழிப்புணர்வு விடயங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து நெல்கொள்வனவு, களஞ்சியப்படுத்தல் வசதிகள் எதிர்நோக்குகின்ற சவால்கள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன .

மேலும், மாவட்ட த்தில் உள்ள கால்நடைகளின் நன்மை கருதி விவசாயிகளிடம் அறுவடையின் பின்னர் கால்நடைகளின் உணவை கருத்தில் கொண்டு நெல் பொட்டுக்களை தீ வைக்காமல் குறைந்தது ஒரு மாதத்திற்கு கால் நடைகள் மேய்வதற்கு ஒவ்வொரு விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டதுடன் இதனை கமநல அபிவிருத்தி திணைக்களம் ,திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்பார்வை செய்வார்கள் என ஆலோசனை வழங்கப்பட்டது. 

 

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி),மாவட்ட விவசாய பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர்,பிரதேச செயலாளர்கள், மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ உதவிப்பணிப்பாளர்,துறை சார்ந்த திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், விவசாய சம்மேளனங்களின் அங்கத்தவர்கள், மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

 

மாவட்ட ஊடகப்பிரிவு

மாவட்டச்செயலகம்

கிளிநொச்சி.

Related Articles