அரசாங்கத்திற்குச் சொந்தமான பங்களாக்களைபொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான முதலீட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி..
முன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்திய பங்களாக்கள் மற்றும் தொடர்புடைய வளாகங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத அரசாங்கத்திற்குச் சொந்தமான வீடுகள் மற்றும் வளாகங்களை பொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான பொருத்தமான முறையை அடையாளம் காண அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.12.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தூதுவராலயங்கள், சர்வதேச நிறுவனங்கள், இராஜதந்திரப் பயன்பாடுகள், அரச மற்றும் அரசுடன் இணைந்த நிறுவனங்கள், High – end Restaurant/Boutique Hotel மற்றும் மிகவும் பயனுள்ள முதலீட்டு வேலைத்திட்டங்களுக்கு குறித்த பங்களாக்களைப் பயன்படுத்துவதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட 24 உல்லாச மனைகளை, அவை அமைந்துள்ள இடங்களுக்கமைய சமூகப் பிரச்சினையை ஏற்படுத்தாத வகையில், 30 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்குப் பொருத்தமான முதலீட்டாளர்களை அடையாளங்காண்பதற்கு இயலுமாகும் வகையில் ஆர்வங்காட்டுகின்ற முதலீட்டாளர்களிடமிருந்து விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


