சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) மற்றும் பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) மற்றும் பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி
  • :
 
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) மற்றும் பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

 கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

 
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் ஊடாக 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்துக்கு 4 திருத்தங்கள் சேர்க்கப்படுவதாக குழுவில் கலந்துகொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதனையடுத்து, இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியதன் பின்னர் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
 
அத்துடன், பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் ஊடாக 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டம் திருத்தப்படுவதுடன், அதன் மூலம் மொத்தச் சேகரிப்பு அறவீடு 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்படும். அத்துடன், இலங்கை பிரஜைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த கசினோ நுழைவு அறவீடு, அமெரிக்க டொலர் 50 இலிருந்து 100 ஆக அதிகரிக்கப்படும். அதற்கமைய, இது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட பின்னர் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
 
மேலும், 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் சர்வதேச தொலைத்தொடர்பு இயக்குனர் வரி செலுத்துவதற்கான செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்படுகிறது.
 
அத்துடன், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 52) 25 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 32 ஆம் பிரிவின் கீழ் மதுவரி உரிமக் கட்டணங்கள் தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த விதிகள் தொடர்பாக குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. எனினும், அதற்கு குழுவின் அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து தகுந்த பகுப்பாய்வு அறிக்கை ஒன்றை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும், அதன் பின்னர் இது எதிர்காலத்தில் பரிசீலனை செய்யப்படும் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
 
இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாண்டோ மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Articles