சைகை மொழிகள் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக நடைபவனி

சைகை மொழிகள் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக நடைபவனி
  • :

சமூக சேவைகள் திணைக்களத்தின் பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஒரு அங்கமாக  சைகை மொழிகள் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக நேற்று (26) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபவனி ஒன்று திருகோணமலை நகர் பகுதியில் நடைபெற்றது.

திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் புத்தளம்  ஆகிய மாவட்டங்களில் உள்ள செவிப்புலனற்றோர்  அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்நடைபவனியினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வினை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் ஆரம்பித்து வைத்ததுடன் அவர் உரையாற்றும் போது இவ்வாறான ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தமைக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் இவ்வாறான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை  இன்று சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் மதிப்புக்குரியவர்கள்  என்றும் இவர்கள் இவ்வாறு ஒன்று சேர்ந்து தங்களின் உரிமைகள் தொடர்பாகவும் தங்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றைய நாட்களில் முக்கியமான தொன்றாக  காணப்படுவதாகவும் கூறினார்.

லிங்க நகர் பகுதியில் உள்ள செவிப்புலனற்றோர்  அமைப்பின் அலுவலகத்தில் இருந்து திருகோணமலை நகராட்சி மன்றத்தை சென்றடைந்து நடைபவனி இனிதே நிறைவடைந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்த மாற்றுத்திறனாளிகளும் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் பங்குபற்றிய அனைவரும் திருகோணமலை நகர சபையை சென்றடைந்த பின்னர் திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் த. பிரணவன்  அவர்கள் உரையாற்றும் போது இன்றைய நாட்களில் சைகை மொழி என்பது பிரதானமான ஒரு மொழி ஊடகமாக மாற்றப்பட்டுள்ளது என்பதையும் சைகை மொழி இல்லாத ஒரு நிகழ்ச்சியை எதிர்காலங்களில் செய்ய முடியாத ஒரு நிலைமைக்கு மாற்றுத்திறனாளிகள் சமூகத்துடன் இணைந்துள்ளார்கள் என்பதையும் இந்நிகழ்வு சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் விஞ்ஞானம், தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் இந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளின் ஆதிக்கம் தற்காலத்தில் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டதுடன் அவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

 

Related Articles