மார்ச் மாதம் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட மகளிர் தின நிகழ்வானது நேற்று (12) மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது.
உலகில் பெண்கள் கல்வியின் மூலம் முன்னோக்கி வந்துள்ளதாகவும், வேலை, விளையாட்டு, அரசியல் என அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறும் போக்கு காணப்படுவதாகவும் இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
பெண்களின் கொண்டாட்டம் ஒரு நாளில் மட்டும் நின்றுவிடாமல், சமுதாயத்தில் பெண்களுக்குரிய மரியாதையும் அன்பும் வழங்கப்பட வேண்டுமென மேலும் தெரிவித்தார்.
"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக - அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்'' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்நிகழ்வு கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், நடன நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்தன.
சர்வதேச மகளிர் தினம் 2025 உடன் இணைந்து வெற்றிகரமான பெண் தொழில்முனைவோரை அங்கீகரிக்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்தில் வெற்றியாளரைத் தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்ற பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு சான்றிதழ்களும் மற்றும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு தமது திறமையை வெளிப்படுத்திய அனைவருக்கும் பரிசில்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.