நாட்டில் இருந்து ஏற்றுமதிசெய்யப்படும் பல்வேறு விவசாய உற்பத்திகளில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கமுகு உற்பத்தி ஊக்குவிக்கப்படுகின்றது. இக்கமுகு அறுவடை விழா 2025 நேற்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட விரிவாக்கல் உத்தியோகத்தர் நர்த்தனா குகதாசன் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் ஜே. ஜே. முரளிதரன் தலைமையில் போரதீவுப்பற்று வம்மியடியூற்று கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள ஏ.பிரபாகரன் என்பவரது வீட்டுத்தோட்டக் காணியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் ஆகியோர் கமுகுகளின் அறுவடையை ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது 2019 ஆம் ஆண்டு ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தினால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கமுகு மரங்களின் பயனாக காய்த்த கழுகுகள் அறுவடை செய்யப்பட்டன.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டு இஞ்சி, மஞ்சள் உட்பட 26,500 கமுகு கன்றுகள், 1000 மிளகு செடி, 1000 கொறுக்கய் கன்றுகள் என்பவற்றைப் பயிரிடுவதற்கு ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வம்மியடியூற்று பொருளாதார அபிவிருத்தி, கிராம உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அப்பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.