மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட இருதய சத்திர சிகிச்சைப் பிரிவின் முதற் கட்ட திறப்பு விழா சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் மக்கள் பாவனைக்காக இன்று (18) கையளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய இருதயவியல் பிரிவு கட்டடம் 324 மில்லியன் ரூபாய் செலவில் 05 தளங்களைக் கொண்டு நிருமாணிக்கப்பட்டுள்ளதுடன் 4,328 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த இருதயவியல் பிரிவு கட்டடத்தின் தரைத் தளத்தில், எக்ஸ்-ரே மற்றும் ஈசிஜி சோதனை அலகுகள் அமைந்துள்ளன. முதல் தளத்தில் ஒரு கேத் லேப் மற்றும் இருதய பராமரிப்பு பிரிவு (CCU) உள்ளன. இரண்டாவது மாடியில் அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் ஒரு அறுவை சிகிச்சை மற்றும் விசேட தீவிர சிகிச்சை பிரிவு (SICU) காணப்படுகிறது. மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகளில் 80 படுக்கைகள் கொண்ட வார்டுகள் உள்ளன.
இதன் போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நவீன மயப்படுத்தப்பட்ட இருதய சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளதுடன் மூன்று மாத காலத்தில் புதிய MRI பிரிவு, வைத்தியசாலைக்கு அவசியமான புதிய கட்டடத் தொகுதியை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதுடன் எதிர்காலத்தில் மேலும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்வதற்கு தேவையான நிதியை வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பித்து நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலாரஞ்சினி கணேசலிங்கம், வைத்திய நிபுணர்கள், உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சிறந்த மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


