இன்று காலை (02) கிழக்கு இந்தோனேசியாவைத் தாக்கிய நிலநடுக்கம் இலங்கையைப் பாதிக்கவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான பலமான நிலநடுக்கம் இன்று காலை கிழக்கு இந்தோனேசியாவைத் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. இந்தோனேசியாவின் டெர்னேட் தீவுக்கு அருகில், மொலுக்கா கடலில் (Molucca Sea) சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்திற்குப் பிறகு, அதன் மையத்திலிருந்து 1,000 கிலோமீட்டர் தொலைவிற்குள் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்று அமெரிக்க எச்சரிக்கை மையங்கள் ஆரம்பத்தில் எச்சரிக்கை விடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவின் கடற்கரைகளில் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு பல சிறிய சுனாமி அலைகள் மற்றும் பின் அதிர்வுகள் (aftershocks) பதிவாகியுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.


