2026.06.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
01. தேசிய வீதிக் கட்டமைப்புக்கு சொந்தமில்லாத வீதிகளில் காணப்படும் பாதுகாப்பற்றதும் மற்றும் ஆபத்தான இடங்களை பாதுகாப்பானதாக புனரமைப்பதற்குப் பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரித்தல்
இலங்கையில் பதிவாகின்ற வீதி விபத்துக்கள் காரணமாக இழக்கப்படுகின்ற உயிர்கள் மற்றும் சொத்துக்கள் அதிகரித்து வருவதுடன், அவற்றில் குறிப்பிடத்தக்களவு தேசிய வீதிக் கட்டமைப்புக்குச் சொந்தமில்லாத கிராமிய மற்றும் பிரதேச வீதிகளில் இடம்பெறுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆயினும், அவ்வாறான ஆபத்தான நிலைமைகளை நீக்கி வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பிரதேச ரீதியான நிறுவனக் கட்டமைப்புக்களில் போதுமானளவு நிதியொதுக்கீடு இன்மையால் இந்நிலைமை தொடர்ந்து நிலவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அதனால், தேசிய வீதிக் கட்டமைப்புக்கு சொந்தமில்லாத வீதிகளில் காணப்படும் பாதுகாப்பற்றதும் மற்றும் ஆபத்தான இடங்களை பாதுகாப்பானதாகப் புனரமைப்பதற்கு வீதிச் சமிக்ஞைகளைப் பொருத்துதல், பாதுகாப்பு வேலிகளை அமைத்தல், வீதிக் குறியீடுகளை இடல், வேகத்தைக் கட்டுப்படுத்தும் தடைகளை இடல் போன்ற படிமுறைகளை மேற்கொள்வதற்காக குறித்த கருத்திட்ட முன்மொழிவுகளை மாவட்ட மட்டத்தில் இனங்கண்டு, மாகாண சபைகளின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொண்டு, 2026 ஆம் ஆண்டின் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வீதிப் பாதுகாப்பு மற்றும் மோட்டார் வாகன முகாமைத்துவத்தின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியில் குறித்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. சுகவாழ்வு மற்றும் சுகாதாரநல நிலையங்கள் மூலம் சமூகத்தவர்களின் அணுகல்களை அதிகரித்தல்
தொடர்ச்சியான சனத்தொகை அதிகரிப்பு மற்றும் தொற்று நோய் நிலைமை மாற்றங்கள் காரணமாக இலங்கையின் சுகாதார தேவைகள் துரிதமாக மாற்றமடைந்து வருவதுடன், தொற்றா நோய்கள், தொற்று நோய்கள் மற்றும் விபத்துக்கள் எனும் மூன்று அம்சங்களாக சுகாதாரத் துறையில் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. அரச துறை மற்றும் தனியார் துறை என இரண்டு துறைகளுக்கிடையே காணப்படுகின்ற இலங்கையின் ஆரம்ப சிகிச்சையளித்தல் குறிப்பாக குணப்படுத்த முடியாத நோய் நிலைமைக்கு சிகிச்சையளிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்ற கட்டமைப்பின் பிரகாரம் இயங்குகின்றது. இலங்கையின் பேரண்ட சுகாதார சேவைகள் சுட்டிகள் எதிர்பார்க்கின்ற மட்டத்தை விடவும் குறைவான பெறுமதியைக் கொண்டிருப்பினும், அது பிராந்திய பொதுவான பெறுமதியைக் கொண்டுள்ளது. அதன்படி நோய்க் கட்டுப்பாடு மற்றும் இலவச சுகாதார சேவைகளுக்கான அணுகலை உயர்த்தும் நோக்;கில் 'வளமான நாடு – அழகான வாழ்க்கை' எனும் தொலைநோக்குக்கு அமைய 'சுகவாழ்வு மற்றும் சுகாதாரநல நிலையங்களை' அமைப்பதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதுதொடர்பாக 2025.09.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு முன்மொழியப்பட்டுள்ள சுகவாழ்வு மற்றும் சுகாதாரநல நிலையங்கள் ஊடாக சமூகத்தவர்களின் அணுகல்களை அதிகரிக்கின்ற கருத்திட்டத்தை மிகவும் பயனுள்ள வகையிலும் வினைத்திறனாகவும் அமுல்படுத்துவதற்கு விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் வழங்கிய விதந்துரைகளைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள பிரதேச மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட மொத்தமாக ஆரம்ப சுகாதார நிறுவனங்களின் எண்ணிக்கையை 2,000 ஆக அதிகரிக்கும் நோக்கில் 1,000 சுகவாழ்வு மற்றும் சுகாதாரநல நிலையங்களை 2026 – 2028 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டம் கட்டமாக நிறுவுவதற்கும் மற்றும் குறித்த நிலையங்களுக்குத் தேவையான மனிதவளம் மற்றும் பௌதீக வளங்களை வழங்குவதற்கும் தொழில் அமைச்சர் மற்றும் பதில் கடமையாற்றும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்களும் ஒருங்கிணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. இரத்தினபுரி போதனா மருத்துவமனையின் புதிய சிறுவர் நோயாளர் விடுதிக் கட்டிடத்தொகுதியில் நான்காவது மாடியில் சிறுவர் தீவிர சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்தல்
சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள பிரதான மூன்றாம் நிலை சுகாதார சிகிச்சைகளை வழங்குகின்ற நிறுவனமான இரத்தினபுரி போதனா மருத்துவமனை மூலம் விரிவான மருத்துவ சேவைகள் வழங்கப்படுவதுடன், அது தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளமையால் மருத்துவக்கல்வி மற்றும் ஆய்வுகளின் முன்னேற்றங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குகின்றது. 2016.07.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம், குறித்த மருத்துவமனையின் சிறுவர் நோயாளர் விடுதிக் கட்டிடத்தொகுதிக்கு ஐந்துமாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக நிதியுதவி வழங்குவதற்காக முன்வந்த உள்நாட்டு கொடையாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது அக்கட்டிடம் மூன்றாம் மாடி வரைக்கும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிறுவர் தீவிர சிகிச்சைப் பிரிவை நிறுவுவதற்காக புதிய நோயாளர் விடுதியை நான்காம் மாடியில் நிர்மாணிப்பதற்காக நிதியுதவியை வழங்குவதற்காக மீண்டும் உள்நாட்டு நன்கொடையாளர்கள் முன்வந்துள்ளனர். குறித்த கருத்திட்டத்திற்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் விதந்துரையும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, கருத்திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுச் செலவு 64.15 மில்லியன் ரூபாய்களை உள்நாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, இரத்தினபுரி போதனா மருத்துவமனையின் புதிய சிறுவர் நோயாளர் விடுதிக் கட்டிடத்தொகுதியில் நான்காவது மாடியில் 'சிறுவர் தீவிர சிகிச்சை' பிரிவை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் ஏற்புடைய நன்கொடையாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. இலங்கையின் மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளிட்ட கடலோர வலயங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவம்
திண்மக் கழிவுகளை முறையற்ற வகையில் இடுவதால் பிளாஸ்ரிக் உள்ளிட்ட அதிகளவான திண்மக்கழிவுகள் நாட்டின் உட்பகுதியிலிருந்து ஆறுகள் கால்வாய்கள் ஊடாக சமுத்திரத்திற்கு சென்றடைவதால், மீன்பிடித் துறைமுகங்கள், மீனவ இறங்குதுறைகள் மற்றும் நங்கூரமிடும் இடங்களை அண்டிய பகுதிகளில் பயிபர்கிளாஸ் திண்மக்கழிவுகள் அதிகளவில் முறையற்ற வகையில் இடப்படுவதால் சுகாதார ரீதியான, சமூக ரீதியான மற்றும் சுற்றாடல் ரீதியான பிரச்சினைகள் பல தோன்றியுள்ளதுடன், இலங்கையின் கடலோரப் பிரதேசங்களில் பரந்து காணப்படும் சுற்றாடல் கூருணர்வு தொகுதிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் கடலோரப் பிரதேசங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்குப் பல நிறுவனங்கள் இருப்பினும், குறித்த நிறுவனங்களுக்கிடையே முறையான ஒருங்கிணைப்புக்கள் இல்லாமைக்குத் தீர்வாக தற்போது கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை கடலோர மற்றும் மீன்பிடித் துறைமுகங்களின் திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான தேசிய குழு மற்றும் கடலோர மாவட்டங்களிலுள்ள உள்ளுராட்சி நிறுவனங்களை இணைப்புச் செய்து 84 பிரதேசக் குழுக்களை நிறுவியுள்ளது. அதற்கமைய, கடலோரப் பிரதேசங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாக கீழ்க்குறிப்பிட்டுள்ள படிமுறைகளை மேற்கொள்வதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• தேசிய குழுவில் அங்கத்துவம் வகிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஏனைய பங்காள நிறுவனங்களுடன் இணைந்து கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையால் தயாரிக்கப்பட்டுள்ள 'கடலோர மற்றும் மீன்பிடித் துறைமுகங்களின் திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான முன்மொழிவுக்கோவையை' அமுல்படுத்தல்
• குறித்த முன்மொழிவுக் கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை மிகவும் வினைத்திறனாக மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள தொலைபேசி செயலி (mobile app) இனைப் பயன்படுத்தல்.
• பயிபர்கிளாஸ் திண்மக்கழிவுகளை முறையான வகையில் இடுவதற்குரிய பொறுப்புக்களை ஒப்படைக்கும் வகையில் 'உற்பத்தியாளரின் விரிவான பொறுப்பு' எனும் கோட்பாட்டை அறிமுகப்படுத்தல் மற்றும் அமுல்படுத்தக்கூடிய வகையில் 1996 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டம் மற்றும் 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான படிமுறைகளை மேற்கொள்ளல்.
05. எண்ணெய் மற்றும் அபாயகர தீங்கு விளைவிக்கும் பொருட்களின் தீழ்ப்புக்களின் போது துரிதமாக செயலாற்றுவதற்கான உத்தேச தேசிய திட்டம் மற்றும் அதன் டிஜிட்டல் தளம் (Digital Platform)
இலங்கைக்கு அண்மையில் அமைந்துள்ள மேற்கு மற்றும் கிழக்கு மத்தியதரைக்கடல் கப்பல் போக்குவரத்துப் பாதையில் 400 இற்கும் அதிகமான கப்பல்கள் பயணித்தல், வருடாந்தம் இலங்கைத் துறைமுகங்களுக்கு 5000 இற்கும் மேற்பட்ட கப்பல்கள் வருகைதரல், தற்போதுள்ள துறைமுகங்களை விரிவாக்கம் செய்தல், எண்ணெய் சார்ந்த செயற்பாடுகள் அதிகரித்திருத்தல் மற்றும் உலகளாவிய காலநிலை மாற்றங்களால் ஏற்பட்ட தாக்கங்கள் காரணமாக தொடர்ந்துவரும் காலங்களில் இலங்கையைச் சுற்றியுள்ள சமுத்திர வலயங்களில் எண்ணெய் மற்றும் அபாயகர தீங்கு விளைவிக்கும் பொருட்களின் தீழ்ப்புக்கள் இடம்பெறுதல் மற்றும் அதனால் கடல்சார் சூழல் மாசடைவுகள் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் இருக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கை சமுத்திர வலயங்களில் அவ்வாறான மாசடைவுகளைத் தடுப்பதற்காக வேலைத்திட்ட முறைமையொன்றைத் தயாரித்தல் மற்றும் அமுலாக்கம் செய்தல் போன்றன கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதான பணிப்பொறுப்புக்களாகும். அதற்கமைய, குறித்த ஏற்பாடுகளின் கீழ் இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள எண்ணெய் மற்றும் அபாயகர தீங்கு விளைவிக்கும் பொருட்களின் தீழ்ப்புக்களின் போதான பதில்வினையாற்றல்களையும் உள்வாங்கி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த தேசிய திட்டத்தின் டிஜிட்டல் தளத்தின் (Digital Platform) முதலாவது கட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய. எண்ணெய் மற்றும் அபாயகர தீங்கு விளைவிக்கும் பொருட்களின் தீழ்ப்புக்களின் போது செயலாற்றுவதற்கான உத்தேச திட்டத்தின்படி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. இற்றைப்படுத்தப்பட்ட இலங்கை தேசிய பசுமை செய்தியாக்க முறைமைக்கான வழிகாட்டல்
உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளில் நிலைபெறுதகு செயலாற்றுகையை அதிகரிக்கும் நோக்கில், அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம், 'தேசிய பசுமை செய்தியாக்க முறைமை' 2012 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளது. அதற்காக சர்வதேச நிலைபெறுதகு செய்தியாக்க பணிச்சட்டகமான Global Reporting Initiative (GRI) இன் 2011 ஆண்டுக்கான மூன்றாம் தலைமுறை தரநியமங்கள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டாகும் போது சர்வதேச நிலைபெறுதகு பசுமை செய்தியாக்கப் பணிச்சட்டகத்தின் தரநியமங்கள் இற்றைப்படுத்தப்பட்டுள்ளமையாலும், மற்றும் சமகால உலகளாவிய போக்குகளான காலநிலை மாற்றம், பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் மற்றும் பரிஸ் உடன்படிக்கைகளின் கடப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, தேசிய பசுமை செய்தியாக்க முறைமையைத் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, சுற்றாடல் குறிகாட்டிகள் 31 உம், சமூக ரீதியான குறிகாட்டிகள் 30 உம் மற்றும் கட்டுப்பாட்டு குறிகாட்டிகள் 15 உம் உள்ளடங்கலாக 76 குறிகாட்டிகளுடன் கூடிய சர்வதேச நிலைபெறுதகு செய்தியாக்க வழிகாட்டியை இற்றைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய பசுமை செய்தியாக்க முறைமையைக் கடைப்பிடிப்பதற்கு உடன்பாடுகளைத் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு 05 செய்தியாக்க மட்டங்கள் அவற்றின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம் மற்றும் இலங்கை பேண்தகு அபிவிருத்தி சபை உள்வாங்கும் வகையில் 24 அங்கத்தவர்களுடன் கூடிய தேசிய நிலைபெறுதகு செய்தியாக்கக் குழுவை மீண்டும் நிறுவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, சுற்றாடல் அமைச்சரால் அமைச்சரவையின் கவனத்திற்கு மேற்குறிப்பிட்டவாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இற்றைப்படுத்தப்பட்ட இலங்கை தேசிய பசுமை செய்தியாக்க முறைமை மற்றும் அதுதொடர்பான வழிகாட்டியை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
07. இலங்கை நில அளவை திணைக்களத்திற்குச் சொந்தமான வன்பிரதியாகக் காணப்படுகின்ற 3.5 மில்லியன் காணித்துண்டு வரைபடங்களை எண்ணிமமயப்படுத்தி (Digitize) காணித் தகவல் முறைமையில் உட்சேர்த்தல்
இலங்கையில் 16 மில்லியன் காணித் துண்டுகள் காணப்படுகின்றமை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த காணித் துண்டுகளில் தற்போது 6 மில்லியன் காணித்துண்டுகள் நில அளவை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 2.5 மில்லியன் தகவல்கள் எண்ணிம வடிவில் (Digitize Format) காணப்படுகின்றது. குறித்த தரவுகள் காணித் தகவல் முறைமையில் உட்சேர்த்து இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரச நிறுவனங்கள், பங்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சரியானதும் மற்றும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட காணித் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு வசதிகளை வழங்குவதன் மூலம் காணி முகாமைத்துவத்தை வினைத்திறனாகவும் மற்றும் தீர்மானமெடுக்கும் இயலுமையை அதிகரிக்கும் நோக்குடன், 1800 ஆம் ஆண்டிலிருந்து நில அளவை செய்யப்பட்டுள்ள வன் பிரதிகளாகக் காணப்படும் 3.5 மில்லியன் காணித்துண்டுகளின் தகவல்களை எண்ணிமமயப்படுத்p காணித் தகவல் முறையில் உட்சேர்க்கின்ற கருத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. நகரங்கள் 10 இனை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளங் காணப்பட்ட கருத்திட்டங்களை அமுல்படுத்தல்
இலங்கையில் அடையாளங் காணப்பட்டுள்ள மனங்கவர் நகரங்களை மாதிரி நகரங்களாக அவற்றின் மரபுரிமை மற்றும் தனித்துவ அடையாளங்களை மேலோங்கச் செய்யும் வகையில் மறுசீரமைப்புச் செய்வதற்கும், குறித்த நகரங்களை நாமமிடுவதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரசித்தப்படுத்துவதற்கும் 2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 1,300 மில்லியன் ரூபாய்கள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அநுராதபுரம், கதிர்காமம், கொழும்பு மற்றும் கண்டி போன்ற நகரங்களில் தனித்துவ அடையாளம் மற்றும் விசேட இயல்புக்கூறுகளை மேலோங்கச் செய்யும் வகையில் நகர நாமமிடல் (City Branding) கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தகுதிவாய்ந்த மதியுரை சேவைகள் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள கற்கைக்கமைய, குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்காக 2026 ஆண்டில் 325 மில்லியன் ரூபாய்கள் செலவாகுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், நகர அபிவிருத்தித் துறையில் முறையான, முன்னுரிமைப்படுத்தப்பட்ட மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையொன்றை மேம்படுத்தும் நோக்கில், நகரங்கள் 10 அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், மாத்தளை, ஹட்டன், மட்டக்களப்பு, சிலாபம், தம்புத்தேகம, வவுனியா, எஹலியகொட, பதுளை மற்றும் மாத்தறை போன்ற நகரங்களில் அடையாளங் காணப்பட்டு முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள 217 கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நகர நாமமிடல் கருத்திட்டத்திற்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் எஞ்சுகின்ற 975 மில்லியன் நிதி மற்றும் ஹட்டன் மற்றும் மாத்தளை போன்ற நகரங்களின் அபிவிருத்திப் பணிகளும் இவ்வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்படுவதால் குறித்த நகர அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள 500 மில்லியன் ரூபாய்கள் உள்ளடக்கப்பட்டு 1,475 மில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி 2026 ஆம் ஆண்டுக்கான 10 நகரங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை துரிதமாக அமுல்படுத்துவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. 'நட்பு நகரம்' வேலைத்திட்டத்தின் கீழ் 25 நகரங்களை அபிவிருத்தி செய்தல்
2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைய நகர அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதன்கீழ் 'நட்பு நகரம்' எனும் பெயரிலான அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 'பொதுமக்களின் மற்றும் பிரதேச சமூகங்களின் வசதிகள் மற்றும் நல்லாரோக்கியத்திற்கான சிறிய நகரங்களை அபிவிருத்தி செய்தல்' எனும் பிரதான நோக்கத்துடன் கூடிய இவ்வேலைத்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 25 நகரங்களில் ஒரு அத்தியாவசிய அபிவிருத்திப் பணி என அடையாளங்கண்டு, குறித்த பணிகள் 2026 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, 'நட்பு நகரம்' வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்துவதற்கு அடையாளங் காணப்பட்டுள்ள 23 நகரங்களுக்கான உத்தேச கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள 581 மில்லியன் ரூபாய்களை 'க்ளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. கெரவலப்பிட்டி இடைமாறல் உள்ளிட்ட கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வீதியின் மின் விளக்குத் தொகுதிகளை மீள்புதிப்பித்தல் மற்றும் மேம்படுத்தல்
கெரவலப்பிட்டி இடைமாறல் உள்ளிட்ட கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வீதியின் மின் விளக்குத் தொகுதிகள் குறிப்பாக போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நாசகார செயல்களாலும் மற்றும் திருட்டுக்களாலும் அதிகளவில் சேதமடைந்துள்ளதுடன், தற்போது மின்விளக்குத் தொகுதிகளில் 85மூ வீதமானவை செயலிழந்து காணப்படுகின்றன. அதனால், அதிவேக நெடுஞ்சாலையின் மொத்த நீள்பாதைக்கும் மின் விளக்குத் தொகுதியைப் பொருத்துவதற்கு செலவிட வேண்டிய தொகையைக் கருத்தில் கொண்டு, பேலியகொட, கெரவலபிட்டி, சீதுவ மற்றும் ஜாஎல போன்ற இடமாறல் பிரதேசங்களும், புதிய களனிப் பாலம் தொடக்கம் பேலியகொட மீன்சந்தை வரைக்கும் மற்றும் சீதுவ தொடக்கம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரைக்கும் வீதியின் பகுதிகள் மாத்திரம் முதலாம் கட்டமாக வீதி மின் விளக்குத் தொகுதிகளைப் பொருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த வீதியின் பகுதிகளில் வீதி மின் விளக்குத் தொகுதியை மீள்புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்தல், 02 பக்கேஜ்களாக 1,098.50 மில்லியன் மதிப்பீட்டுச் செலவின் கீழ் தேசிய போட்டி விலைமனுக்கோரல் முறையைக் கடைப்பிடித்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒப்பந்தக்காரர்கள் மூலம் நிறைவேற்றுவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. அமரதேவ அழகியல் கலைகள் மற்றும் ஆய்வு மையம் (அமரதேச ஆச்சிரமம்) நிர்மாணித்தல் கருத்திட்டம்
இலங்கையின் இசைத்துறையில் கலாநிதி பண்டித் அமரதேவ அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய சேவையைப் பாராட்டுமுகமாக 2017 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட விசேட வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் பிரகாரம் அமரதேவ அழகியல் கலைகள் மற்றும் ஆய்வு மையம் (அமரதேச ஆச்சிரமம்) நிர்மாணிக்கும் திட்டம் அப்போதிருந்த வெகுசன ஊடக அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 09 ஆண்டுகள் கடந்திருப்பினும், இதுவரை நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு இயலுமை கிட்டவில்லை. குறித்த கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் அத்தியாவசிய அலுவலக உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான 226.18 மில்லியன் நிதியொதுக்கீட்டை 2025 ஆம் ஆண்டில் திறைசேரி மூலம் வழங்கப்பட்டிருப்பினும், குறித்த நிதியில் 2025 ஆம் ஆண்டில் 141.54 மில்லியன் ரூபாய்கள் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தின் அனைத்து வேலைகளும் இவ்வாண்டில் நிறைவு செய்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் 113.17 மில்லியன் ரூபாய்கள் நிதியை வழங்குவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. முள்ளிக்குளம் காற்றாலை மின் விநியோகக் கருத்திட்டத்தின் பகுதி யு இற்கான நிர்மாணத்திற்கான ஒப்பந்தத்தை வழங்கல்
முள்ளிக்குளம் காற்றாலை மின் விநியோகக் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக 2025.02.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பகுதி யA மற்றும் பகுதி B என இரண்டு கருத்திட்டங்களுடன் கூடிய இவ்வேலைத்திட்டத்தின் பகுதி B இன் நிர்மாணத்திற்கான ஒப்பந்தம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம் கிலோவாற்று 220/33 சேகரிக்கும் மின் உபநிலையத்தின் உள்ளீட்டு விபரம் மற்றும் குறித்த உப மின்நிலையங்களில் 220 கிலோவாற்று சேகரிப்புக் கம்பிவடங்கள் 02 இனை நிர்மாணிப்பு உள்ளடக்கப்பட்ட A பகுதி நிர்மாணிப்புக்கான சர்வதேச போட்டி பெறுகை முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்காக 04 விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்டப் பெறுகைக் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் கணிசமான பதிலளிப்புக்களைச் சமர்ப்பித்துள்ள குறைந்தபட்ச விலைமனுதாரரான RS Infraprojects (Pvt) Ltd இற்கு 6.04 மில்லியன்அமெரிக்க டொலர்கள் மற்றும் 499.66 மில்லியன் இலங்கை ரூபாய் தொகைக்கு (பெறுமதி சேர் வரியில்லாமல்) குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. 2026ஃ27 காலப்பகுதிக்கான சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்துக்கு உராய்வு எண்ணை வழங்கலுக்கான பெறுகையை வழங்குதல்
சபுகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் A உற்பத்தி நிலையம் மற்றும் B உற்பத்தி நிலையங்களுக்கு 2026ஃ27 காலப்பகுதிக்கான பெறுகை செயற்பாடுகளை அமுல்படுத்துவதற்காக 2026-02-09 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தேசிய போட்டி பெறுகை முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 03 விலைமனுக்கள் கிடைத்துள்ளன. மேற்குறித்த விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் உயர்மட்ட பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட விதந்துரைகளின் அடிப்படையில் பின்வரும் வகையில் குறித்த பெறுகைகளை வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
சபுகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் A உற்பத்தி நிலையத்துக்கு 316,000 லீற்றர் உராய்வு எண்ணை விநியோக ஒப்பந்தம் கணிசமான பதிலளிப்புக்களை சமர்ப்பித்துள்ள குறைந்தபட்ச விலைமனுதாரரான Lanka IOC PLC நிறுவனத்துக்கு 392.47 மில்லியன் ரூபா (பெறுமதிசேர் வரியுடன்) பணத்துக்கு வழங்குதல்.
சபுகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் B உற்பத்தி நிலையத்துக்கு 304,000 லீற்றர் உராய்வு எண்ணை விநியோக ஒப்பந்தம் கணிசமான பதிலளிப்புக்களை சமர்ப்பித்துள்ள குறைந்தபட்ச விலைமனுதாரரான Chevron Lubricants Lanka PLC நிறுவனத்துக்கு 434.86 மில்லியன் ரூபா (பெறுமதிசேர் வரியுடன்) பணத்துக்கு வழங்குதல்.
14. சிறிய நகரங்கள் மற்றும் கிராமிய நீர் வழங்கல் திட்டத்தை அமுல்படுத்துதல்
இலங்கையிலுள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான நீர் வழங்கல் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என்பதுடன், இந்நிலைமை நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் தாக்கம் செலுத்தும் பிரதான சவாலாக உள்ளது. அந்நிலையை தவிர்த்து, 50 சிறிய நகரங்கள் மற்றும் கிராமிய பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் 300 திட்டங்கள் ஊடாக பகுதியளவான நகர மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் 600,000 வரையான குடும்பங்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தின் மூலம் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பேண்தகு குடிநீர் வழங்கல் கட்டமைப்புகளை நிறுவுவதைக் குறிக்கோளாக கொண்டுள்ளதுடன், தேசிய மற்றும் சர்வதேச குடிநீர் தரநியமங்களுக்கு ஏற்புடைய வகையில் குளோரினேற்றல் மற்றும் வடிகட்டல் கட்டமைப்பு உள்ளிட்ட நவீன சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களை பாவித்து தண்ணீரை சுத்திகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனையை கருத்திலெடுத்து, முன்மொழியப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான சாத்தியவள ஆய்வை மேற்கொண்டு, ஆய்வு பெறுபேற்றின் அடிப்படையில் அரச முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்குவதன் மூலம் 2027-2029 காலப்பகுதியில் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை மற்றும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தினால் மேற்குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
15. 2026 ஆண்டின் 04 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குளிரூட்டிகள் மற்றும் வளிச்சீராக்கல் அலகுகளில் பெருமளவில் பாவிக்கப்படும் இரசாயனக் கலவையான ஹைட்ரோக்லோரோபுலோரா காபன் மூலம் ஓசோன் படலம் தேய்வடைதல் மற்றும் புவி வெப்பமடைதல் அதிகரிப்பதன் காரணமாக மொன்றியல் கூட்டமைப்பின் கீழ் ஹைட்ரோக்லோரோபுலோரா காபன் உலகளாவிய ரீதியில் படிப்படியாக அகற்றப்படுகிறது. அதற்கமைய, இலங்கையும் 2030 ஆண்டளவில்; மேற்குறித்த இரசாயன பதார்த்தங்களை கட்டங்கட்டமாக அகற்றுவதற்கான கடப்பாடுகளை கொண்டுள்ளது. அதற்கமைய, 2026-06-06 ஆம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில் ஹைட்ரோக்லோரோபுலோரா காபன் மட்டும் பயன்படுத்தி இயங்கும் உபகரணங்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் இறக்குமதியை தடை செய்வதற்காகவும், 2028.01.01 திகதி தொடக்கம் அமுலாகும் வகையில் உபகரணங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் குளிரூட்டல் கட்டமைப்பின் உள்ளடக்கமாக பாவிக்கப்படும் ஹைட்ரோக்லோரோபுலோரா காபன் பாவனையில் மட்டும் இயங்கும் உபகரணங்கள் மற்றும் உதிரிப் பாகங்களின் இறக்குமதியை தடை செய்வதற்காக 1969 ஆண்டின் 01 இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2026 ஆண்டின் 04 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள் 2487ஃ29 இலக்க 2026.05.07 திகதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
16. மொனராகல மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் யானை – மனித மோதல்களை குறைப்பதற்கான யானை வழித்தடப் பாதைகளை பிரகடனம் செய்தல்
நாட்டிலுள்ள நிலப்பரப்பின் 2/3 அளவான பகுதிகளில் காட்டு யானைகள் வாழ்ந்துவரும் அதேவேளை பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மனித செயற்பாடுகளால் காட்டு யானைகளின் வாழ்விடங்கள் மற்றும் அவற்றின் வழித்தடப் பாதைகள் நாளுக்கு நாள் வேகமாக தடைப்படுதல், யானை – மனித மோதல்கள் தீவிரமடைவதற்கு நேரடியாக தாக்கம் செலுத்தியுள்ளது. மேற்குறித்த மோதல்களை ஓரளவு குறைப்பதற்கான யானைகளின் வாழ்விடங்கள் மற்றும் வழித்தடப் பாதைகளைப் பாதுகாக்கும் செயற்பாடுகளை மிகவும் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. வன சீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடர்புடைய பிரதேச செயலாளர்கள், பங்காள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து காட்டு யானைகளின் வழித்தடப் பாதைகளை இனங்காணும் செயற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்படுகிறது. மொனறாகலை மாவட்டத்தின் காட்டு யானை வழித்தடப் பாதைகளை இனங்காணும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஹந்தபானாகல தொடக்கம் தெமோதர மாணிக்க கங்கை ஊடாக யால தேசிய சரணாலயம் வரை யானை வழித்தடப் பாதை இனங்காணப்பட்டுள்ளது. அதற்காக மொகறாகலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. யால தேசிய சரணாலயத்தின் VI இலக்க வலயம் லுணுகம்வெஹர தேசிய சரணாலயம் தொடக்கம் உடவளவ தேசிய சரணாலயம் வரையான யானை வழித்தடக் காட்டுப் பாதை, வெட்டஹிர கந்த இயற்கை பாதுகாக்கப்பட்ட வனமாக 2002 ஆண்டி ல் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. குறித்த நிலப் பகுதியில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட 5 காணித் துண்டுகள் இனங்காணப்பட்டுள்ளதுடன், குறித்த காணிகள் இதுவரை அபிவிருத்தி செய்யப்படவில்லை. அதற்கமைய, பின்வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
மொனறாகலை மாவட்டத்தின் ஹந்தபானகல தொடக்கம் தெமோதர மாணிக்க கங்கை ஊடாக யால தேசிய சரணாலயம் வரை யானை புலம்பெயர்வு பாதை வன விலங்கினங்கள் மற்றும் தாவரவினங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் சரணாலயமாக பிரகடனம் செய்தல்.
வெட்டஹிர கந்த இயற்கை பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் உள்ள 05 அனுமதிப்பத்திர காணிகளுக்கு மாற்றீடாக வன ஜீவராசிகள் பாதுகாக்கப்பட்ட வனத்துக்கு வெளியே பொருத்தமான இடத்தில் மாற்று காணி வழங்கி வெட்டஹிர கந்த இயற்கை பாதுகாக்கப்பட்ட வனத்தை 'வன நுழைவு' என மீண்டும் பிரகடனம் செய்தல்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொஹொலன்கல யானை வழித்தடப் பாதைக்கு இடையூறாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் உள்ளிட்ட காணித் துண்டுகளை இழப்பீடு செலுத்தி கையகப்படுத்தி ஹம்பாந்தோட்டை காட்டு யானை முகாமைத்துவ வனத்துக்குரிய பிரதேசமாக பிரகடனம் செய்தல்.
17. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம்
தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக 2025.12.05 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேற்குறித்த திடீர் அனர்த்த நிலைமை காரணமாக ஆகக்கூடிய பாதிப்புக்குள்ளான சில மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராய்ந்து பார்க்கும் போது, இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக பின்வரும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
வீடுகளை இழந்து குடியிருப்பதற்கு வீடற்றவர்கள் தமது வீட்டை நிர்மாணிக்கும் வரை ஒரு இடத்தில் தற்காலிகமாக குடியமர்வதற்காக ஆகக்கூடியது 06 மாதங்கள் வரை வழங்கப்படும் மாதாந்த வீட்டு வாடகை கொடுப்பனவை ஆகக் கூடியது 09 மாதங்கள் வரை நீடிக்கும் வகையில் தேவையான சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுதல்.
கற்கள், மண் மற்றும் சிதைவுகள் சேர்ந்ததனால் அழிவடைந்துள்ள வயல்களை மீண்டும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடிய வகையில் தயார்படுத்துவதற்காக மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர்கள்ஃஉதவி ஆணையாளர்களால் அங்கீகாரம் வழங்கப்படும செலவு மதிப்பீட்டுக்கமைய தொடர்புடைய நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்ற பின்னர் மேற்குறித்த சிதைவுகளை அகற்றி மீண்டும் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற வகையில் தயார் செய்வதற்கு உரிய சுற்றறிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல்.
கற்கள், மண் திட்டுக்கள் மற்றும் இடிபாடுகள் வீழ்ந்த இடங்கள் அல்லது மண்சரிவு ஆபத்துக்கள் நிலவுகின்ற இடங்களில் மண்சரிவு ஆபத்துகளை குறைப்பதற்கான செயற்பாடுகளை தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் விதந்துரைக்கமைய மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் கீழ் மண்சரிவுகளை தணிக்கும் வேலைத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை முன்னுரிமையுடன் பயன்படுத்தல்.
தேவையான ஒதுக்கீடுகளை பொருத்தமான வகையில் அனர்த்த நிவாரண மற்றும் புனரமைப்புக்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை திறைசேரி மூலம் ஏற்பாடு செய்தல்.
18. இலங்கை சுற்றுலா ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மக்கள் சீன குடியரசின் கலாச்சார, சுற்றுலா நிர்வாகம் தொடர்பான மத்திய கலாசாலை ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுதல்.
கல்விப் பரிமாற்றம், தொழில் பயிற்சி, ஒருங்கிணைந்த ஆராய்ச்சி, விரிவுரையாளர்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் அறிவை பகிர்தல் உள்ளிட்ட துறைகளில் நிறுவன ரீதியான ஒத்துழைப்புக்கான கொள்கைச் சட்டகத்தை உருவாக்குதலை நோக்கமாக கொண்டு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை சுற்றுலா, ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் சீனக் குடியரசின் கலாச்சார, சுற்றுலா நிர்வாகம் தொடர்பான மத்திய கலாசாலையுடனான ஒத்துழைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பங்கேற்பை முறைமைப்படுத்துவதற்காக சட்டமா அதிபரின் அவதானிப்புக்களும் உள்ளடக்கப்பட்ட புரிந்துணைர்வு உடன்படிக்கை வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை சுற்றுலா ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் சீன குடியரசின் கலாச்சார, சுற்றுலா நிர்வாகம் தொடர்பான மத்திய கலாசாலை ஆகியவற்றுக்கு இடையிலான உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.


