மனித வள நிபுணர்கள் சங்கத்தின் (AHRP) 25ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் நீண்டகால பொருளாதார மாற்றத்தை முன்னெடுப்பதில் மனித மூலதன அபிவிருத்தி, தொடர்ச்சியான கற்றல் மற்றும் கூட்டுத் தலைமைத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மனித வள நிபுணர்கள் சங்கம் இந்த முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதையிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர், கடந்த கால் நூற்றாண்டுகளாக இலங்கையில் மனித வளத் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக சங்கத்தின் நிறுவனர்கள், முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பங்காளிகள் வழங்கிய விலைமதிப்பற்ற பங்களிப்பைப் பாராட்டினார்.
நாட்டின் பொருளாதார மீட்சி குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர், நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதிலும் நிறுவனங்களைப் பலப்படுத்துவதிலும் இலங்கை ஊக்கமளிக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், நிலையான தேசிய அபிவிருத்திக்கு போட்டித்திறன், புத்தாக்கம், உற்பத்தித்திறன், சுற்றுச்சூழல்மீதான பொறுப்புக்கூறல் மற்றும் உள்ளக வளர்ச்சி ஆகியவற்றுக்கு அவசியமான பரந்த தொலைநோக்குப் பார்வை அவசியம் எனத் தெரிவித்தார்.
நாட்டின் மிகச்சிறந்த போட்டித்திறன் வாய்ந்த சாதகமான காரணி, அதன் இயற்கை வளங்களிலோ அல்லது நிதி மூலதனத்திலோ மாத்திரம் தங்கியிருக்கவில்லை, மாறாக மக்களின் அறிவு, திறன், படைப்பாற்றல், நெகிழ்ச்சித்திறன் மற்றும் தார்மீக விழுமியங்களிலேயே தங்கியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
நமது பொருளாதாரத்தின் எதிர்கால பலமானது, நமது மக்கள் பெற்றுள்ள அறிவு, அவர்கள் தங்களை எவ்வாறு மாற்றியமைத்துக் கொள்கிறார்கள் மற்றும் எந்த அளவு திறம்பட இணைந்து செயல்படுகிறார்கள் என்பதிலேயே தங்கியிருக்கும்," எனக் குறிப்பிட்ட பிரதமர், மனித வள மேம்பாடு ஒரு தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டைப் பலப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய பிரதமர், கல்வி, தொழிற்பயிற்சி, தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புத் தேவைகளுக்கு இடையில் நெருக்கமான சீரமைப்பொன்றை ஏற்படுத்துமாறு அழைப்பு விடுத்த பிரதமர், வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் மாறிவரும் தொழிலாளர் சந்தை தேவைகளுக்கு இலங்கையின் மனிதவளத்தைத் தயார்படுத்துவதற்காக, டிஜிட்டல் எழுத்தறிவு, தொழில்நுட்பக் கல்வி, தொடர் கற்றல் வாய்ப்புகள் மற்றும் தொடர்ச்சியான மீள்திறன் பெறுதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட திறன் ஆகியவற்றை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
எதிர்காலத்திற்குத் தயாரான மனிதவளத்தை உருவாக்குவதற்கு கூட்டுச் செயல்பாடு அவசியம் எனக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் மனித மூலதனத்தை வலுப்படுத்துவதில் அரசாங்கம், கல்வி நிறுவனங்கள், தொழில் வழங்குநர்கள், அபிவிருத்திப் பங்காளிகள், தொழில்துறை சங்கங்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகிய அனைத்தும் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.
நிர்வாகப் பணியாக இருந்த மனித வள நிர்வாகத்தை ஒரு மூலோபாயத் துறையாக மாற்றுவதற்கு AHRP வழங்கிய பங்களிப்பை அங்கீகரித்த அவர், இலங்கையின் நிறுவன ரீதியான செயல்திறன், உற்பத்தித்திறன் மற்றும் தொழில்முறைத் தரங்களை மேம்படுத்துவதில் சங்கத்தின் பங்களிப்பினைப் பாராட்டினார்.
மனிதவள நிபுணர்கள் மத்தியில் மேலும் உரையாற்றிய பிரதமர், நிறுவன கலாசாரத்தை வடிவமைத்தல், தலைமைத்துவத்தை வளர்த்தல், உள்ளடக்கல் தன்மையை ஊக்குவித்தல், புத்தாக்கத்திற்கு ஆதரவளித்தல், நம்பிக்கை மற்றும் நியாயத்தைப் பாதுகாத்தல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மனிதர்களை மையமாகக் கொண்டிருப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றில் அவர்களின் விரிவடைந்து வரும் பங்கினை எடுத்துரைத்தார்.
ஒரு நிறுவனத்தின் உண்மையான வெற்றி என்பது நிதிச் செயல்திறனால் மாத்திரம் அளவிடப்படுவதில்லை, மாறாக மக்களை மேம்படுத்துதல், பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளுதல், ஊழியர்களின் நல்வாழ்வை ஆதரித்தல் மற்றும் ஒவ்வொரு தனிமனிதனும் தங்களது முழுத் திறமையினையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலமுமே அளவிடப்படுகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்தோடு, தொழில்முறைத் தரத்தினைத் தொடர்ந்து பலப்படுத்தவும், கல்வித்துறை மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கு இடையேயான உரையாடலை வளர்க்கவும், எதிர்கால வாய்ப்புகள் மற்றும் சவால்களுக்கு இலங்கையின் மனிதவளத்தைத் தயார்படுத்தவும் வேண்டுமெனச் சங்கத்தை அவர் ஊக்குவித்தார்.
இலங்கையின் நீண்டகால வெற்றியானது இறுதியில் அதன் மக்களிடம் வளர்க்கப்படும் திறன்களாலேயே தீர்மானிக்கப்படும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், மனித மூலதன மேம்பாட்டை "ஒரு பகிரப்பட்ட தேசியப் பொறுப்பாகும்" எனத் தெரிவித்தார்.
AHRP இன் 25 ஆண்டுகால சேவைக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், நெகிழ்ச்சித் தன்மையும், புத்தாக்கமும்மிக்க, வளமான இலங்கையைக் கட்டியெழுப்புவதில் இந்தச் சங்கம் தொடர்ந்து அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
மனித வள நிபுணர்கள் சங்கம் (AHRP) தனது 25ஆவது ஆண்டு நிறைவை, ஜூலை 16ஆம் திகதி கொழும்பு, Cinnamon Life ஹோட்டலில் பெருமையுடன் கொண்டாடியது. இந்த மைல்கல் நிகழ்வானது, இலங்கையில் மனித வளத் தொழில்துறையை மேம்படுத்துவதில் AHRP இன் 25 ஆண்டுகாலப் பயணத்தை நினைவுகூரும் வகையில் மனித வள நிபுணர்கள், வணிகத் தலைவர்கள், தொழில்துறை பங்காளிகள் மற்றும் விசேட விருந்தினர்களை ஒன்றிணைத்திருந்தது.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் சங்கத்தின் தலைவர் துஷார ஜயவர்தன உள்ளிட்ட விசேட விருந்தினர்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு


