ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான முதன்மை பணிப்பகத்தின் பிரதி தலைவர் மேஜர் ஜெனரல் அலெக்சாண்டர் இவனோவிச் ஜின்சென்கோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், உயர்மட்ட ரஷ்ய இராணுவக் குழுவினர் பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் நடைபெற்ற செயல் திட்ட மாநாட்டில் பங்கேற்றனர்.
2025 ம் ஆண்டிற்கான ரஷ்ய கூட்டமைப்புக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான செயல் திட்டத்தை நிறைவு செய்வதில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த சந்திப்பிற்கு மேஜர் ஜெனரல் ஜின்சென்கோ மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளர் (பாதுகாப்பு) திரு. ஹர்ஷ விதானாராச்சி ஆகியோர் தலைமை தாங்கினர். இருதரப்பு இராணுவ உறவுகளை வளர்ப்பதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் இராஜதந்திர ஈடுபாட்டின் முக்கியத்துவம் தொடர்பாக கலந்துரையாடினர்.
தொடர்ச்சியான ஒத்துழைப்பின் உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில், இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுப் சின்னங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த இராஜதந்திர ஈடுபாடு ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் மேலும் ஒரு திட்டத்தில் முன்னோக்கி செல்கின்றது. இந்த சந்திப்பானது பரஸ்பர பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்புக்கான இரு நாடுகளின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.