இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் வடக்கின் முக்கோண வலயத்தில் 10 இலட்சம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் 15 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி தெரிவித்தார்.
தேங்காய் விலை அதிகரித்தல், தென்னை உற்பத்திகளின் வீழ்ச்சி உட்பட தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு மூன்று வருடங்களைப் பார்க்கும் போது 2024 ஆம் ஆண்டில் தென்னை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், சாதாரணமாக சராசரியாக ஒரு வருடத்திற்குத் தென்னை உற்பத்தியாக 3000 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தியானதாகவும், 2024ஆம் ஆண்டில் அது 10%ஆல் குறைவடைந்துள்ளதாகவும் அவர் விபரித்தார்.
தொழில்நுட்பம் போன்ற முகாமைத்துவ விடயங்கள் செல்வாக்குச் செலுத்துவதாகவும் தொழில்நுட்பக் காரணியாக தென்னை மரத்திற்கு அவசியமான அத்தியவசிய போசனை வழங்குதல், மரத்திற்கு அவசியமான நீர் பாய்ச்சுதல், மரத்தைப் பாதுகாப்பதுடன் சம்பந்தப்படுவதாகவும், தென்னை வீழ்ச்சி அடைவதற்கு செல்வாக்குச் செலுத்தும் பிரதான காரணிகள் என்றும் தெளிவுபடுத்தினார். ஆனால் கடந்த வருடங்களில் அறுவடை வீழ்ச்சி அடைவதற்கு இந்தக் விடயங்களை முறையாக செயற்படுத்தாமையும் இதனுடன் சம்பந்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நமது நாட்டில் உள்ள காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களும் தென்னை உற்பத்தியை நேரடியாகப் பாதிப்பதாகவும் தெரிவித்த தலைவர், கடந்த வருடத்தில் (2024) இடம்பெற்ற அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழை வீழ்ச்சியும் தென்னை அறுவடை குறைவடைவதற்குச் செல்வாக்குச் செலுத்தியதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் விலங்குகளினால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களும் விசேடமாக தென்னை உற்பத்திக்கு தாக்கம் செலுத்துவதாகவும் கடந்த வருடத்தில் (2024) குரங்குகளினால் ஏற்பட்ட பாதிப்புகளினால் தென்னை உற்பத்தி பாரிய அளவில் குறைந்ததாகவும், பூச்சிகள் அவற்றுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்ட தலைவர், இந்த வருடத்தில் அந்த பூச்சிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார்.
அவ்வா நுகர்வோருக்கு கூட்டுறவு, சதோச போன்ற நிறுவனங்களில் நிவாரண விலையில் தேங்காய் கிடைப்பதற்கு வழங்குவதற்கான திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்ட தலைவர், தென்னை உற்பத்தியாளர்கள் தேங்காய் உற்பத்திக்காக ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் அந்த விவசாயிகளுக்கு மானியங்கள் மற்றும் தென்னங்கன்றுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி சுட்டிக்காட்டினார்.