தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி விஜேரத்னவின் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையை ஏற்றுக்கொண்டு தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவிப்பு
தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிப்பதற்குத் தேவையான தலையீட்டை மேற்கொள்வதாகவும் ஏற்கனவே அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த தெரிவித்தார்.
மார்ச் 8 ஆம் திகதி இடம்பெற்ற மகளிர் தினத்தையொட்டி அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி விஜேரத்னவினால் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதத்தில் பதில் வழங்கி உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த, வன்முறை மற்றும் துன்புறுத்தல் அற்ற தொழில் உலகிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார். அதற்கமைய, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை பிரதிநிதியுடன் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு கலந்துரையாடல்களில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், அதற்கமைய தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
2025.03.08 ஆம் திகதி பி.ப. 6.00 மணி முதல் 6.30 மணி வரை இடம்பெற்ற இந்த விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ILO உடன்படிக்கை 190 இன் முக்கியத்துவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.
பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் துன்புறுத்தல் அற்ற தொழில் உலகிற்காக அனைவருக்கும் காணப்படும் உரிமையை கண்டறிந்து 2019 ஜூன் 21 ஆம் திகதி சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் 108 ஆவது அமர்வில் தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையை அங்கீகரிக்கின்ற ஒவ்வொரு உறுப்பினரும், வன்முறை மற்றும் துன்புறுத்தல் இன்றி சகலரும் செயற்படக்கூடிய உரிமையை பாதுகாக்கும் சூழலை உருவாக்குவதற்கு அர்ப்பணித்து செயற்படுவதை உறுதிப்படுத்துகின்றது. இந்த உடன்படிக்கையை அங்கீகரிப்பதன் மூலம் வன்முறை மற்றும் துன்புறுத்தல் அற்ற தொழில் உலகிற்கான அரசங்கத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதுடன், அதுமட்டுமல்லாமல், அது சம்பந்தப்பட்ட சட்டரீதியான அமுல்படுத்தல்களுக்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் விவாதத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதற்கமைய, இந்த உடன்படிக்கையை இலங்கையில் அங்கீகரிப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காமை காரணமாக இலங்கையின் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அந்த சந்தர்ப்பம் இழந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.