கொழும்பு 07ல் அமைந்துள்ள சிறிமாவே பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதான கேட்போர் கூடத்தில் அண்மையில் (04) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, பாராளுமன்றத்தின் சட்டவாக்கத் திணைக்களத்தின் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அமல் எதிரிசிங்க மற்றும் சிறிமாவே பாண்டாரநாயக்க கல்லூரியின் அதிபர் (கலாநிதி) ஜே.சுமேதா ஜயவீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
ஜனநாயகத்தின் மதிப்புக்களைப் பாடசாலை மாணவர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதற்கும், பாராளுமன்ற அமைப்புப் பற்றிய நடைமுறை அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்குவதை நோக்காகக் கொண்டு சிறிமாவோ கல்லூரியும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இங்கு பிரதான உரை நிகழ்த்திய கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சமூகத்தை ஒரு முற்போக்கான நிலைக்குக் கொண்டுவருவதில் பெண்களுக்குப் பெரும் பங்கு இருப்பதாகத் தெரிவித்தார். எனவே, மாணவர் பாராளுமன்றம் போன்ற நிகழ்ச்சிகளின் ஊடாகப் பாடசாலை மட்டத்திலிருந்தே இதற்குத் தேவையான உந்துதலை வழங்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரசியல் போன்ற துறைகளில் பெண்களின் தலைமைத்துவத்தை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும், தற்போதைய பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முன்னைய பாராளுமன்றங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். இருந்தபோதும் ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த மட்டத்திலேயே பெண்களின் பிரதிநிதித்துவம் அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டினார். எனவே, சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்திலிருந்து எதிர்கால பெண் தலைவர்கள் உருவாகுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தமக்கு இருப்பதாகவும் ஹேமாலி வீரசேகர மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் "எதிர்கால தலைமைத்துவம் மற்றும் மாணவர் பாராளுமன்றம்" என்ற தலைப்பில் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும் நிகழ்ச்சியில் உரையாற்றிய பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, மாணவர் பாராளுமன்றங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் அனுபவம் மாணவர்களின் எதிர்கால தலைமைத்துவத்திற்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் நன்மை பயக்கும் என்றார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தேர்தலகள் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்த தனது கருத்துக்களை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. இதன் பின்னர் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சர்களும் தமது அமைச்சினால் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள திட்டங்களை முன்வைத்து அவை பற்றி விளக்கமளித்தனர்.
மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவியருக்கு சின்னங்களும் அணிவிக்கப்பட்டன. இலங்கைப் பாராளுமன்றத்தின் அதிகாரிகள், சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.