பௌத்த கலாச்சாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நீலகிரி தூபியின் புனித சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை பிரதிஷ்டை செய்யும் விழா சமீபத்தில் (மார்ச் 4) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய தூபியாக கருதப்படும் நீலகிரி தூபி, சியம்பலாண்டுவ-பொத்துவில் சாலையில் 19 கிலோமீட்டர் தொலைவில், மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் எல்லையில் அம்பாறை லாகுகல வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த தூபி 215 அடி உயரமும் 104 அடி அகலமும் கொண்டது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தூபியின் புனிதச் சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை பிரதிஷ்டை செய்யும் விழா பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பி.என். டி கோஸ்டா மற்றும் விமானப்படையின் பிரதி பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சமிந்த விக்ரமரத்ன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவின் போது புனிதச் சின்னங்களும் பொக்கிஷங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நீலகிரி தூபியின் புனரமைப்புப் பணிகள் இலங்கை விமானப்படையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை ராமண்ண நிக்காயாவின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய மகுலேவே விமல மகாநாயக்க தேரர், நா உயன ஆரண்ய சேனாசனாதிபதி அதி வணக்கத்திற்குரிய அகுல்கமுவே ஆரியனந்த தேரர், ஸ்ரீ கல்யாணி யோகாஸ்ரம சங்க சபையின் தலைவர் ஸ்ரீ லங்கா ராமண்ண நிகாயவின் பதிவாளர் அதி வணக்கத்திற்குரிய அத்தனகனயே சாசனரத்ன தேரர், பொல்கசோவிட்ட விபாசனா தியான மையத்தின் விகாராதிபதி அதி வணக்கத்திற்குரிய மீத்தேவே வினீத தேரர் உட்பட வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் துசித மெண்டிஸ், சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள், மேலும் ஏராளமான பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.