நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், 18 மாவட்டங்களில் 5,736 குடும்பங்களைச் சேர்ந்த 18,696 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், 458 குடும்பங்களைச் சேர்ந்த 1,324 பேர் தற்போது 18 பாதுகாப்பு மையங்களில் தங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேசச் செயலாளர்கள் தேவையான நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பார்கள் என்றும், சமைத்த உணவு, உலர் உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான தலையீடுகள் சுகாதார மருத்துவ அலுவலகங்கள் மூலம் இந்த நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.


