பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அதன் தலைவர் சுகாதார மற்றும் வெகுசன ஊடக கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் நேற்று (04) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி, கௌரவ பிரதிசபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நாடு முழுவதிலுமுள்ள மருத்துவமனைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதற்கமைய தற்பொழுது வைத்தியசாலைகளில் பயன்படுத்தாமல் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அம்பியூலன்ஸ் வண்டிகளில் உள்ள குறைபாடுகளைச் சீர்செய்து அவற்றை நோயாளிகளின் பராமரிப்புச் சேவைக்குப் பயன்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், அவ்வாறு குறைபாடுள்ள அம்பியூலன்ஸ் வண்டிகளை அரசாங்கத்திற்குச் செலவு இன்றி, தனியார்துறை மட்டத்தில் சீர்செய்து பயன்படுத்துவதற்குக் காணப்படும் சட்டரீதியான ஏற்பாடுகள் குறித்து கேள்வியெழுப்பினர். இது தொடர்பான நிலைமைகளை ஆராய்ந்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க முடியும் என அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறிய அளவிலான பராமரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய வாகனங்களுக்காக மாகாண மட்டத்தில் சுகாதார அமைச்சின் சிறிய பராமரிப்பு அலகுகளை அமைப்பது பொருத்தமானது எனத் தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க, அதன்படி முதற்கட்டமாக மேல்மாகாணத்தில் அவ்வாறானதொரு அலகொன்றை அமைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச ஒசுசலவொன்றை அமைப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்குப் பொருத்தமான இடம் மற்றும் காணி அடையாளம் காணப்பட்ட பின்னர் ஒசுசலவை விரைவில் அமைக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கிழக்கு மாகாணத்தில் வைத்தியசாலைகளை நிர்மாணிப்பது குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி, கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையாத வைத்தியசாலைகளின் கட்டுமானத்தை முடிப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாக குழுவில் தெரிவிக்கப்பட்டது. பிராந்திய வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள், மருத்துவர்களின் பற்றாக்குறை மற்றும் மருத்துவர்களின் இடமாற்றங்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், வெகுசன ஊடக அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, ரஜரட்ட பிராந்திய வானொலி ஒலிபரப்பை தொடர்ந்தும் நடாத்திச் செல்வதா என அதிகாரிகளிடம் கௌரவ உறுப்பினர்கள் வினவினர். தற்பொழுது ரஜரட்ட வானொலி பல சிரமங்களுக்கு மத்தியில் ஒலிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதனை நிறுத்துவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், வானொலியை மீண்டும் உயர் மட்டத்திற்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். ரஜரட்ட சேவைக்கு தன்னார்வமாக வளங்களை வழங்குவதற்கு கலைஞர்கள் மற்றும் நிபுணர்கள் குழு தயாராக இருப்பதாகவும், அதற்கு இணைவதற்கு ஒரு முறையான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
ஒன்றுக்கொன்று மாறுபட்ட விடயப்பொறுப்பைக் கொண்ட அமைச்சுசார் ஆலோசனைக் குழுவை ஒரு அமர்வாக நடத்தாமல் இரு அமர்வுகளாக நடத்துமாறு கௌரவ உறுப்பினர்கள் இதன்போது முன்மொழிந்தனர். அதற்குப் பதிலளித்த குழுவின் தலைவர், அமைச்சின் இரண்டு விடயப்பொறுப்புகள் பற்றி சிறிய காலத்தில் பரவலாகக் கலந்துரையாடுவது கடினமானது எனவும் உறுப்பினர்கள் குறிப்பிட்டது போன்று, எதிர்காலத்தில் இந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட இரண்டு விடயப்பொறுப்புகள் பற்றி வேறு வேறாகக் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.