இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் மாண்புமிகு கலாநிதி சிரி வால்ட் அவர்கள் பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் நிலையில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் 24 பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்துகொண்டார்.
சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான நல்லுறவையும் மேலும் வலுப்படுத்துவதற்கு சபாநாயகர் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் தூதுவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கையில் தனது பதவிக்காலம் முழுவதும் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைக்காக தூதுவரைப் பாராட்டிய சபாநாயகர், குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட தித்வா புயல் தாக்கத்தின் பின்னர் பின்னர் வழங்கப்பட்ட உதவி உட்பட, சவாலான காலகட்டங்களில் இலங்கைக்கு சுவிட்சர்லாந்து வழங்கிய ஆதரவிற்கும் நன்றியைத் தெரிவித்தார். மேலும், தூதுவரின் எதிர்காலப் பணிகளிலும் அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்தும் வெற்றிபெற தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் சாபாநாயகர் தெரிவித்துக் கொண்டார்.
இந்தச் சந்திப்பில், ஊழலை ஒழித்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தல், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் சபாநாயகர் எடுத்துரைத்தார்.
சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான மற்றும் நட்புறவான தொடர்புகள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான பாராளுமன்ற ஒத்துழைப்பை தொடர்ந்து பேணியும் மேலும் வலுப்படுத்தியும் செல்வதன் முக்கியத்துவம் குறித்தும், அத்துடன் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.


