தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனமும் வட மாகாண கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்த சந்தை தொடர்புகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் (B2B Forum) நேற்று (22.07.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் இந்திர கௌஷிக் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வட மாகாண உற்பத்தியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் உற்பத்திப் பொருட்களை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கான தொடர்புகளை ஏற்படுத்துவதுடன், உற்பத்தியாளர்களையும் ஏற்றுமதியாளர்களையும் நேரடியாக இணைக்கும் நோக்கில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் கருத்துரையாற்றிய வட மாகாண ஆளுநர், வட மாகாண உற்பத்தியாளர்களின் பொருட்களை ஏற்றுமதியாளர்கள் நேரடியாக கொள்வனவு செய்யும் வகையில் சந்தைப்படுத்தல் தொடர்புகளை உருவாக்கும் தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் முயற்சியை பாராட்டினார். மேலும், வட மாகாணத்தின் விவசாயம் மற்றும் கடல்வளம் போன்ற வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும், விவசாய உற்பத்திகளை சேமித்து வைப்பதற்கான வசதிகள் இன்னும் போதிய அளவில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சந்தைப்படுத்தல் சவால்களுக்கு இத்தகைய B2B சந்திப்புகள் சிறந்த தீர்வாக அமையும் என்றும், தொழில் முயற்சியாளர்கள் உற்பத்தியாளர்களாக மட்டுமன்றி எதிர்காலத்தில் ஏற்றுமதியாளர்களாகவும் வளர வேண்டும் என்றும், அதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க வட மாகாண நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கருத்து தெரிவிக்கையில், தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் வட மாகாணத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் ஏற்றுமதியாளர்களையும் ஊக்குவிக்கும் பல்வேறு செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக பாராட்டினார். யாழ்ப்பாண மாவட்டம் தொழில் முயற்சிகளில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும், உற்பத்தியாளர்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குவதும் தொழில் தொடர்புகளை ஏற்படுத்துவதும் அனைவரின் கூட்டுப்பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்நிகழ்வு உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்துள்ளதாகவும், மாவட்டத்தின் உற்பத்தியாளர்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வின் போது தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தினால் உற்பத்தியாளர்களுக்காக "ஏற்றுமதியாளர்கள் இதழ்" வெளியிடப்பட்டது.
இந் நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் கலந்து கொண்டனர்.
மேலும், தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும் நிறைவேற்று அதிகாரியுமான திரு. ஷிகாம் மரிக்கார், இந்திய துணைத் தூதரகத்தின் பிரதிநிதி திரு. சங்கரன் ராஜகோபாலன், வட மாகாண கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாகாணப் பணிப்பாளர் திரு. எஸ். சிவகெங்காதரன், செலான் வங்கியின் உதவி பொது முகாமையாளர், அரச திணைக்களங்களின் அதிகாரிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், கைத்தொழில் அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


