பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் நேற்று (22.07.2026) யாழ்ப்பாணம், நல்லூர் முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், "பனை உற்பத்திகளை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றினால்தான் பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நிலையான முறையில் உயர்த்த முடியும்" என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தப் பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியை ஏற்பாடு செய்த கூட்டுறவுத் திணைக்களத்திற்கு தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
பனை மரம் வடக்கு மக்களின் வாழ்வியல், பண்பாடு மற்றும் அடையாளத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். எனவே, பனை மரத்தை அடையாளமாகக் கொண்ட யாழ்ப்பாண மண்ணில் இவ்வாறான கண்காட்சி நடைபெறுவது மிகவும் பொருத்தமானதும் பெருமைக்குரியதுமாகும் என்றார்.
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு தரமான உணவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், ஒரு பனைமரத்தின் முழுமையான பயன்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இத்தகைய பல்வேறு உற்பத்திகளை உருவாக்கியிருப்பது பாராட்டத்தக்க சாதனையாகும் என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை, இவ்வாறான தரமான பனைப் பொருட்களை நாம் எமது அன்றாட வாழ்க்கையில் எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோம் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்றார். உணவுப் பொருட்களாக இருந்தாலும், கைவினைப் பொருட்களாக இருந்தாலும், பனை சார்ந்த பொருட்கள் எமது வீடுகளில் மிகவும் குறைந்தளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன. இந்த மனப்போக்கில் மாற்றம் ஏற்படாமல் பனைத் துறையின் வளர்ச்சி சாத்தியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
காலத்தின் தேவைக்கு ஏற்ப நவீன பொதியிடல் (Packaging), தரச் சான்றிதழ்கள் மற்றும் கவர்ச்சிகரமான சந்தைப்படுத்தல் முறைகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இன்றைய இளம் தலைமுறையினர் தரமான பொதியிடலுடன் வழங்கப்படும் பொருட்களையே விரும்புகின்றனர் என்பதால் கூட்டுறவுச் சங்கங்களும் காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பனைப் பொருட்களை தயாரிப்பது மட்டுமல்லாமல், மக்கள் எளிதில் வாங்கக்கூடிய இடங்களில் அவற்றை விற்பனை செய்யும் வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார். மாவட்டச் செயலகங்கள், முக்கிய சுற்றுலா மையங்கள் மற்றும் மக்கள் அதிகம் வருகை தரும் இடங்களில் நிரந்தர பனைப் பொருட்கள் விற்பனை நிலையங்களை அமைப்பது விற்பனையை அதிகரிக்க உதவும் என்றும் கூறினார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய துணைத் தூதுவர் திரு. சாய் முரளி அவர்கள் சில பனை உற்பத்திப் பொருட்களை பார்வையிட்டு, அவற்றை விமான நிலையங்கள் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யக்கூடிய உயர்தர ஏற்றுமதிப் பொருட்களாக மாற்ற முடியும் என்று சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
தற்போது யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தேசிய ஏற்றுமதி ஊக்குவிப்பு தொடர்பான கருத்தரங்கொன்று நடைபெற்று வருவதாகவும், கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள ஏற்றுமதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளூர் உற்பத்தியாளர்களின் பொருட்களை ஆய்வு செய்து வெளிநாட்டு சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவர்களையும் இக் கண்காட்சிக்கு வரவழைத்து பனை உற்பத்திகளை பார்வையிட ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.
பனைப் பொருட்கள் உள்ளூர் சந்தையில் மட்டுமே விற்பனையாகும் வரை தொழிலாளர்களின் வருமானம் குறைந்த நிலையிலேயே இருக்கும். அவற்றை ஏற்றுமதி சந்தைக்கு கொண்டு செல்லும் போதுதான் அதிக பெறுமதி கிடைக்கும். அதன்மூலம் பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
எனவே, கூட்டுறவுத் திணைக்களம், பனை அபிவிருத்தி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பனை உற்பத்திகளை ஏற்றுமதியை நோக்கி முன்னெடுத்துச் செல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றார்.
மேலும், பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் உழைப்பை உலகச் சந்தையுடன் இணைத்தால்தான் வட மாகாணத்தின் பொருளாதாரமும் பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் புதிய உயரத்தை அடையும் என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாக, இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த வடக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களம், கூட்டுறவு ஆணையாளர், பிரதான செயலாளர் மற்றும் அனைத்து ஏற்பாட்டாளர்களுக்கும் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்த அவர், பனை உற்பத்திகள் உலகச் சந்தையில் தனித்துவமான இடத்தைப் பெற்று, பனைத் தொழிலாளர்களின் எதிர்காலம் வளமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.


