யாழ்ப்பாணம் மாவட்டக் கூட்டுறவுச்சபை நடாத்திய 104வது சர்வதேச கூட்டுறவு தின விழா கூட்டுறவுச் சபையின் தலைவர் திரு.ப.கேசவதாசன் அவர்களின் தலைமையில் நேற்று (18.07.2026) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் "அனைத்துலக அமைதிக்காக கூட்டுறவுகள்" எனும் தொனிப்பொருளில் சிறப்புற நடைபெற்றது.
இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் சிறப்பு விருந்தினராக கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையார் திரு.கி.சந்திரசேகரன் அவர்களும், கௌரவ விருந்தினராக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு
பிராந்திய முகாமையாளர், திரு.எஸ்.சிவதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் அதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றபட்டு மௌன இறைவணக்கம் இடம்பெற்றதுடன் கூட்டுறவுக் கீதம், வரவேற்பு நடனம், வரவேற்புரை, ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
தொடர்ந்து சர்வதேச கூட்டுறவு தின விழாவை முன்னிட்டான பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களின் பேச்சு, சபையின் அங்கத்துவ சங்கங்களின் கலை நிகழ்வுகள், அதிதிகளின் உரைகள், 104வது சர்வதேச கூட்டுறவு தின விழா போட்டிகளில் வெற்றியீட்டிய பாடசாலை மாணவர்கள், பணியாளர்கள், அங்கத்தவர்கள், கூட்டுறவுக் கல்லூரி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு, அங்கத்தவர் இணைப்பு செயற்திட்டத்திற்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன.
இதனை விட வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் திரு.ரதீஸ் அவர்களின்
சிறப்புரை மற்றும் கூட்டுறவுப் பணியாளர்கள் கௌரவிப்பு முதலான நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந் நிகழ்வில் பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் அங்கத்தவர்கள், வங்கி அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.


