மட்டக்களப்பு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (16) மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரனின் ஏற்பாட்டில் இரு கட்டங்களாக மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டம் காலை 9.30 மணி முதல் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தியின் பங்கேற்புடனும், பி.ப 2.30 மணி முதல் மீன் பிடி பிரதியமைச்சர் ரத்ண கமகேயின் பங்கு பற்றலுடனும் நடைபெற்றது.
சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தியின் கலந்து கொண்ட அமர்வின் போது, மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினை, வனவள பாதுகாப்பு, மணல் அகழ்வு, யானை முதலை அச்சுறுத்தல், உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் கழிவகற்றல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், சில பிரச்சனைகளுக்கான தீர்வுகள் அமைச்சர்களினால் முன்வைக்கப்பட்டதுடன் சில பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுவதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அமைச்சர்களின் ஆலோசனைக்கு அமைவாக குழுக்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மீன் பிடிப் பிரதியமைச்சர் ரத்ண கமகே பங்கேற்ற கூட்டத்தில், விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்கள் எதிர் நேக்கும் மீனவர் இறங்குதுறை, மீனவர்கள் பயன்படுத்தும் வீதிகள் புனரமைப்பு, சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கைகளுக்கான தீர்வு, நன்னீர் மீன் பிடி வளர்ப்பு, வெளிச்ச கோபுரங்கள் அமைத்தல்,
ஆள் கடல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் உள்ளிட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பல விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது சில தீர்வுகள் பிரதியமைச்சர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஆகியோரினால் முன்வைக்கப்பட்டதுடன், ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எதிர்வரும் காலங்களில் சரி செய்து கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்டத்தின் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் றுக்சான் குரூஸ்,
உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்கள அதிகாரிகள், மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


