தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு காலத்தில், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என பலரும் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம். புத்தாண்டின் போது பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை வெடிப்பதனால் பலருடைய கண்கள் பாதித்துள்ளன.
இது போன்ற விபத்துக்கள், வாழ்நாள் முழுவதும் பார்வை குறைபாடு அல்லது நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும். கடந்த கால கணக்கெடுப்பு தரவுகளின்படி, பட்டாசு தொடர்பான காயங்களில்; பொதுவாக 46%, கைகள் மற்றும் விரல்களுக்கு ஏற்படுகிறது. இந்தக் காயங்களில் 17% கண்களிலும், 17% முகம் மற்றும் தலைப் பகுதியிலும் ஏற்படுகின்றன.
பட்டாசு போன்ற வெடிபொருட்களால் கண்ணுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமிடத்து, சுத்தமான ஓடும் நீர் அல்லது சேலேன்; போன்றவற்றால் கழுவ வேண்டும். மேலும், கண்ணில் காயம் ஏற்பட்டால், கண்ணுக்குள் சென்றுள்ள எந்தவொரு பொருளையும் அகற்ற முயற்சிக்கக்கூடாது. கண்ணை சுத்தமான துணியால் மூடிக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குச் வேண்டும்.
திடீர் விபத்துக்களின்போது பீதியினால், பொருத்தமற்ற சிகிச்சைகளை மேற்கொள்வதனூடாக நிலைமை மோசமாக்கும். குறிப்பாக பண்டிகை காலங்களில் பட்டாசுகளை வெடிக்கும்போது, அதைப் பாதுகாப்பாகச் செய்ய வேண்டும், இதற்காக, சரியான தரத்தில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வாங்க வேண்டும்.
வரவிருக்கும் புத்தாண்டு காலத்தில் பட்டாசு வெடிகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கவும், பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ளவும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு இலங்கை தேசிய கண் மருத்துவமனை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
• எப்போதும் ஒரு பெரியவரின் மேற்பார்வையின் கீழ் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சிறு குழந்தைகள் அவற்றை ஒருபோதும் வெடிக்கக் கூடாது.
• பட்டாசுகளை திறந்தவெளிகளில் வெடிக்க வேண்டும், கட்டிடங்களுக்குள்ளோ, வாகனங்களுக்கு அருகிலோ அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் உள்ள பகுதிகளிலோ ஒருபோதும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
• பட்டாசுகளை ஒவ்வொன்றாக கொளுத்த வேண்டும், கொளுத்தியவுடன் உடனடியாக அவ்விடத்தை விட்டு விலக வேண்டும்.
• பார்வையிடுவோர், பட்டாசுகள் வெடிக்கும் இடத்திலிருந்து விலகி தூரமாக இருக்க வேண்டும்.
• எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொளுத்திய பட்டாசை இன்னொருவர் மீது வீசாதீர்கள்.
• பட்டாசுகளில் உள்ள நூலையோ அல்லது அதன் உட்புற பாகங்களையோ சேதப்படுத்த வேண்டாம்
• எரியாத பட்டாசுகளை மீண்டும் எரிக்க முயற்சிக்கக் கூடாது.
• பட்டாசு வெடிக்கும் போது ஒரு வாளி தண்ணீர் வைத்திருக்க வேண்டும். தீக்காயங்களுக்கு முதலுதவி அளிக்கவும், எரியாத பட்டாசுகளை அணைக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.
• தவிர்க்க முடியாத விபத்தை எதிர்கொள்ளும்போது, உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும் என்பதுடன், கை மருந்துகளைத் தவிர்ப்பதும் மிகச் சிறந்தது.
ஒரு சிறிய தவறு உங்கள் குழந்தையின் அல்லது இளைஞர்கள் மற்றும் முதியவர்களின் வாழ்க்கையில் மீள முடியாத வடுவை ஏற்படுத்தக்கூடும். எனவே, பட்டாசுகளைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவோம். விழிப்புணர்வுடன் செயல்படுவதன் மூலம் புத்தாண்டின் மகிழ்ச்சியை இழக்காமல் இருப்போம்.