நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (18) பரிசீலிக்கப்பட்டன.
இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.
அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.
அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.
இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


