சபாநாயகர் மாலைதீவு ஜனாதிபதியைச் சந்தித்தார்

சபாநாயகர் மாலைதீவு ஜனாதிபதியைச் சந்தித்தார்
  • :
இலங்கைக்கு முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை
மேற்கொண்ட மாலைதீவு ஜனாதிபதி கௌரவ (கலாநிதி) முகமது முய்சு அவர்களை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இச்சந்திப்பில் கௌரவ சபாநாயகர், மாலைதீவு ஜனாதிபதியையும், தூதுக் குழுவினரையும் அன்புடன் வரவேற்றார்.
 
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் காணப்படும் நீண்ட, நெருக்கமான இருதரப்பு உறவுகளைப் பறைசாற்றும் வகையில் இவ்விஜயம் அமைந்திருப்பதுடன், தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களின் ஊடாக இந்த உறவுகள் மேலும் வலுப்படும் என கௌரவ சபாநாயகர் இங்கு சுட்டிக்காட்டினார்.
 
இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதை நினைவு கூர்ந்த இரு தரப்பினரும், தங்களுக்கிடையிலான வலுவான வரலாற்று, கலாசார மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகள் வலுப்படுத்தப்படுவதை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
 
பாராளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியம் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாட்டு சட்டவாக்கங்களுக்கும் இடையிலான நெருக்கமான ஈடுபாட்டை அதிகரிப்பதில் இலங்கை – மாலைதீவு பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் வகிபாகத்தை கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
 
இந்தச் சந்திப்பில் பொருளாதார ஒத்துழைப்பு, தேசிய முன்னுரிமைகள், நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, ஊழல் எதிர்ப்பு முயற்சிகள், செயல்திறன் மற்றும் பொருளாதார நிலைப்புத் தன்மையை மேம்படுத்தும் நோக்கிலான டிஜிட்டல் மாற்றம் போன்ற விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
 
மாலைதீவு மாணவர்கள் இலங்கையில் கல்வி கற்பது, இலங்கையின் விருந்தோம்பல் துறையில் மாலைதீவின் ஒத்துழைப்பு, மாலைத்தீவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு உள்ளிட்ட விடயங்களின் ஊடாக இரு நாட்டு மக்களுக்கும் இடையில் வலுவான உறவுகள் காணப்படுகின்றமையையும் கௌரவ சபாநாயகர் வலியுறுத்தினார். இலங்கை மீனவர்களை உள்ளடக்கிய கடல்சார் விவகாரங்களைத் தீர்ப்பதில் தொடர்ந்து காணப்படும் ஒத்துழைப்பையும் சபாநாயகர் இங்கு சுட்டிக்காட்டினார்.
 
இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்திய மாலைதீவு ஜனாதிபதி, இருதரப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்தினார்.
இந்தச் சந்திப்பில் மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மாண்புமிகு ரிஸ்வி ஹசன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்றம், வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related Articles