2026.01.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2026.01.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
  • :

2026.01.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்


01. இந்து சமுத்திர கடலோர அரசுகளின் கூட்டணியை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சூரை மீன் (Tuna fish) மீன்பிடித் தொழிலானது இந்து சமுத்திர வலயத்தின் தேசிய பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, தொழில் உருவாக்கம் மற்றும் கடலோர சமூகத்தவர்களின் சமூக பொருளாதார உறுதிப்பாட்டுக்கு அதிகளவில் பங்களிப்பு வழங்குகின்றது. ஆனாலும், அதிகளவான மீன்களைப் பிடிப்பதால் மீன்கள் குறைவடைதலும், உணவுப் பாதுகாப்புக்கும் ஆபத்துக்கள் தோன்றியுள்ளன. அதனால், சூரை மீன் வளங்கள் முகாமைத்துவத்தில் ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்துவதற்காக பங்களாதேசம், இந்தோனேசியா, ஈரான், மடகஸ்கார், மலேசியா, மாலைதீவு, மொசம்பிக், பாகிஸ்தான், சோமாலியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றின் மூலம் இந்து சமுத்திரத்தின் கடலோர அரசுகளின் கூட்டணியை உருவாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்புக்களை அதிகரித்தல், மீனவ சமூகத்தவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரித்தல், இயலளவை கட்டியெழுப்புதல் மற்றும் மீன் வளங்களைப் பேண்தகு வகையில் முகாமைத்துவம் செய்தல் போன்ற நோக்கங்களுக்கு, இந்து சமுத்திரத்தின் கடலோர அரசுகளின் கூட்டணியை தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. ஐக்கிய அமெரிக்காவுக்கான அஞ்சல் நடவடிக்கைகளுக்காக அகில உலக அஞ்சல் சங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டல்களைக் கடைப்பிடித்தல்
2025.08.29 அன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இதுவரை நிலவிய 800 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு அதிகமான பெறுமதிகொண்ட பண்டங்களுக்கான இறக்குமதி வரி இல்லாமல் குறைந்தபட்ச வரிவிலக்கை நீக்குவதற்கு ஐக்கிய அமெரிக்கா தீர்மானித்துள்ளமையால், 100 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்குக் குறைவான பெறுமதி கொண்ட வணிகரீதியற்ற பரிசுப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் மற்றும் விசேட விதிவிலக்குகளுக்குரிய அஞ்சல் பொருட்கள் தவிர்ந்த, அந்நாட்டுக்கு அனுப்பப்படுகின்ற பொருட்கள் அடங்கிய ஏனைய அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களுக்கு அவற்றின் பெறுமதியைக் கருத்தில் கொள்ளாமல் சுங்கவரி செலுத்தப்படல் வேண்டும். அத்துடன், குறித்த இறக்குமதி வரியைச் செலுத்தாமல் ஐக்கிய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ள இறக்குமதி வரி விதிக்கப்படும் சர்வதேச அஞ்சல் பொருட்களுக்கு அந்நாட்டு அஞ்சல் நிர்வாகம் பொறுப்புக் கூறாது. அதன் காரணமாக, இலத்திரனியல் வணிகத்தின் (e- Commerce)  மூலம் ஐக்கிய அமெரிக்காவுக்கு அஞ்சல் மூலம் பொருட்களை அனுப்புகின்ற எமது நாட்டு வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நிலைமைக்குத் தீர்வாக அகில உலக அஞ்சல் சங்கத்தால் விசேட மென்பொருள் செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த அஞ்சல் பொருட்களுக்கு அறவிடப்படும் இறக்குமதி வரி மற்றும் ஏனைய கட்டணங்கள், அப்பொருட்களை ஐக்கிய அமெரிக்காவில் கிடைக்கும் போது செலுத்த முறைமை வசதியை ஐக்கிய அமெரிக்காவின் சுங்க தேச எல்லைகள் பாதுகாப்பு நிறுவனத்தின் Customs and Border Protection) அங்கீகாரம் பெற்ற நிறுவனமான ZONOS நிறுவனத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, இச்செயன்முறைக்கமைய அகில உலக அஞ்சல் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களைக் கடைப்பிடிப்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்;துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. கிவுல்ஓயா அபிவிருத்திக் கருத்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தல்

கிவுல்ஓயா நீர் வளத்தை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்தி வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நீர்ப் பற்றாக்குறை, வறுமை மற்றும் குறை விவசாய உற்பத்தித்திறன் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும், பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியையும் நோக்காகக் கொண்டு, கிவுல்ஓயா அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2011.09.28 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்போதைய மதிப்பீட்டுச் செலவாக 4,170 மில்லியன் ரூபாய் கருத்திட்டமானது, மகாவலி நீர்த்தேக்க அபிவிருத்திக் கட்டமைப்பின் 'டு' வலயத்தில் 04 ஆண்டுகளில் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிட்டிருப்பினும், 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அக்கருத்திட்டத்தை 2023.12.31 அன்று தொடக்கம் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கருத்திட்டப் பிரதேசத்தில் நிலவுகின்ற குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நீர்ப்பற்றாக்குறைக்குத் தீர்வாக உத்தேச கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கிவுல்ஓயா அபிவிருத்திக் கருத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கும், உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி 2026 ஆம் ஆண்டு தொடக்கம் 2031 ஆம் ஆண்டு இறுதிவரையான காலப்பகுதியில் கருத்திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கும், கருத்திட்டத்தின் மொத்தச் செலவு மதிப்பீட்டை 23,456 மில்லியன் ரூபாய்களாக திருத்தம் செய்வதற்கும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. பேஸ்லைன் வீதி நீடிப்புக் கருத்திட்டத்தின் ஐஐஐ ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்தல்

பேஸ்லைன் வீதி நீடிப்புக் கருத்திட்டத்தின்; ஐஐஐ ஆம் கட்டமாக கிருலப்பன சந்தியிலிருந்து கொழும்பு – ஹொறண வீதியின் துட்டகைமுனு வீதி வரையான 0.86 கிலோமீற்றர் தூரம் 06 பாதைகளுடன் கூடிய வீதியை அமைப்பதற்காக 2009.11.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்கள் மீண்டும் மூலோபாயப்படுத்தல் மற்றும் துரிதப்படுத்தல் அதிகாரிகள் குழுவின் விதந்துரையின் அடிப்படையில் கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இக்கருத்திட்டம் எமது நாட்டின் தேசிய வீதிகள் பிரதான திட்டத்தின் ((National Road Master Plan) கீழ் முன்னுரிமை உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திப் பணியாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், குறித்த நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான காணிகளை கையப்படுத்தும் நடவடிக்கைகளில் 90ம% வீதமானவை தற்போது பூர்த்தியடைந்துள்ளது. இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கொழும்பு – ஹொறண வீதியின் பயண நேரம் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தக்களவு குறைவதுடன், அதனால் நகரத்திற்கான அணுகல் மற்றும் பொருளாதார ரீதியான பயனுறுதன்மை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, பேஸ்லைன் வீதி நீடிப்புக் கருத்திட்டம் iii ஆம் கட்டத்தை நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. இராஜகிரிய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியின் கீழ் 4,074 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தின் உப கருத்திட்டங்கள் 06 இல் ஒரு உப கருத்திட்டமான இராஜகிரிய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2020.03.04 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இக்கருத்திட்டத்தின் ஒப்பந்தகாரர்களின் பலவீனமான செயலாற்றுகை காரணமாக குறித்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து, அக்கருத்திட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்குப் பொருத்தமான ஒப்பந்தக்காரர்களைத் தெரிவு செய்வதற்காக தேசிய போட்டி விலைமுறிக் கோரல் முறைமையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, சமர்ப்பிக்கப்பட்டுள்ள 06 விலைமனுக்கள் தொடர்பாக உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் வழங்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், இராஜகிரிய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தை அமுல்படுத்தும் ஒப்பந்தத்தை M/s Maga Engineering (Pvt) Ltd இற்கு வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான 2026 வரவுசெலவு திட்ட நிவாரணங்களை வழங்குவதற்கான முறைமை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான நாளாந்த சம்பளத்தை வழங்கும் நோக்கத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஆகக்குறைந்த சம்பளத்தை ரூபா 1,550/- வரை அதிகரித்தல் மற்றும் வருகைக்கான நாளாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவாக அவர்களுக்கு ரூபா 200/- வழங்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2026 வரவுசெலவு திட்டத்தில் முன்மொழிந்துள்ளார். அதற்கமைய, குறித்த முன்மொழிவை அமுல்படுத்துவதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி 2026 ஆண்டு வரவுசெலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அரசு செலுத்த உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி மாதம் 01 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 06 மாத காலத்துக்கு ஏற்புடைய பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக செலுத்துவதற்கும், அதன் பின்னர், தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் கேட்டறிந்து மேற்குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை நேரடியாக தோட்ட தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, மேற்குறித்த முறைமையை பின்பற்றி குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் அவர்கள் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

07. இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட வரைபு
காப்புறுதி துறையின் அறிவு விருத்தி மற்றும் மேம்பாட்டை மையமாகக் கொண்ட நிறுவனமாக செயற்படுவதற்காக 1982 ஆண்டில் இலங்கை காப்புறுதி நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் காப்புறுதி தொடர்பான கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், பயிற்றுவித்தல் மற்றும் தொழில்வாண்மை பரீட்சைகளை நடத்தும் இலங்கையின் ஒரேயொரு தொழில்வாண்மை நிறுவனமாகும். 2000 ஆண்டின் 43 இலக்க காப்புறுதி தொழிற்துறையை முறைமைப்படுத்தும் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற காப்புறுதி முகவர்களாக தகைமை பெறுவதற்காக இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சார்பில் இலங்கை காப்புறுதி நிறுவனத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளில் சித்தியடைதல் கட்டாயமானதாகும். இலங்கை காப்புறுதி நிறுவனம் தனது கருமங்களை முறையாக நிறைவேற்றுவதற்கு தேவையான அதிகாரத்தை வழங்குதல் மற்றும் நிதி ரீதியில் நிலைபேறான நிறுவனமாக இயங்குவதற்கான இயலுமை கிடைக்கும் வகையில் இலங்கை காப்புறுதி நிறுவனத்தை கூட்டிணைப்பதற்காக 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் நிதி விடயதான அமைச்சால் இலங்கை காப்புறுதி நிறுவனத்தை கூட்டிணைப்பதற்கான அடிப்படைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த அடிப்படை சட்ட மூலத்திற்கு சமகால இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. மேற்குறித்த அடிப்படைச் சட்ட மூலத்தின் அடிப்படையில் இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

08. 2016.01.01 திகதியின் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச அலுவலர்களின் நியமன கடிதங்களில் ஓய்வூதிய உரித்து தொடர்பான ஏற்பாடுகளை திருத்தம் செய்தல்.

அரச அலுவலர்களுக்கு மிகவும் பொருத்தமான பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகம் செய்தல் தொடர்பான 2016 வரவுசெலவு திட்ட முன்மொழிவுக்கமைய 2016.01.01 திகதியின் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச அலுவலர்களின் நியமன கடிதங்களில் 'இந்நியமனம் ஓய்வூதியத்துடன் கூடியதாகும். ஊழியர்களுக்கு உரித்தான ஓய்வூதிய முறை தொடர்பாக அரசால் மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு இணங்கியொழுக வேண்டும்' எனும் ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2016.01.01 திகதியின் பின்னர் அரச சேவைக்கு நியமனம் பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய முறை இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என்பதுடன், தற்போதுள்ள ஓய்வூதிய முறைக்கான அவர்களது உரித்தை உறுதி செய்து குறித்த நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான நிபந்தனை திருத்தம் செய்வதற்காக 2026 வரவுசெலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, 2016.01.01 திகதியின் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து அரச அலுவலர்களின் நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான ஏற்பாட்டை 'இந்நியமனம் ஓய்வூதியம் உள்ளதாகும். நீங்கள் விதவைகள்ஃ தபுதாரர் ஓய்வூதிய முறைக்கு பங்களிப்புத்தொகை செலுத்தப்படல் வேண்டும்.' என்றவாறு திருத்தம் செய்வதற்கும், குறித்த விடயம் தொடர்பான ஆலோசனை சுற்றறிக்கையை வெளியிடுவதற்கும் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. காலி நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
காலி நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர் பதவியில் தற்போது கடமையாற்றுகின்ற திரு. டப்ளிவ்.ஏ.தர்மசிறி அவர்கள் 2026.01.25 ஆம் திகதியுடன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார். அதற்கமைய, வெற்றிடமாகும் காலி நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர் பதவிக்கு தென்மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, கிராமிய அபிவிருத்தி, கலாச்சார மற்றும் கலைகள் விவகார,சமூக நலன்புரி, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள், மகளிர் விவகார மற்றும் பொருளாதார மேம்பாடு, வீடமைப்பு மற்றும் கட்டுமானம் மற்றும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றுகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான திரு.கே.யூ.சந்திரலால் அவர்களை 2026.01.26 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


10. நாணயக் கொள்கை கட்டுக்கோப்பு உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு பணவீக்க இலக்குகள் முதன்மைப் பணவீக்க எறிவுகள் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்திற்;கு சமர்;ப்பித்தல்

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 26(1) பிரிவின் கீழ் நிதி அமைச்சருக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையில் 2023.10.03 அன்று கையொப்பமிடப்பட்டுள்ள நாணயக்கொள்கை கட்டுக்கோப்பு உடன்படிக்கைக்கமைய, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டுள்ள கொழும்பு நுகர்வு விலைச்சுட்டெண் மூலம் அளவிடப்படும் காலாண்டுக்கான முதன்மைப் பணவீக்கம் 5% மட்டத்தில் பேணிச் செல்லும் பொறுப்பு இலங்கை மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 26(5) பிரிவுக்கமைய, இப்பணவீக்க இலக்குகள் திட்டவட்டமான நிலை அளபுருக்களை தொடர்ச்சியான 02 காலாண்டுகளில் பூர்த்தி செய்வதற்கு இலங்கை மத்திய வங்கிக்கு இயலாமல் போனால், மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை அது தொடர்பான அறிக்கையொன்றை நிதி விடயதானத்திற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர் மூலமாக பாராளுமன்றத்திற்குச் சமர்;ப்பித்தல் வேண்டும். அத்துடன், குறித்த அறிக்கை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இருத்தல் வேண்டும். 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் முதன்மைப் பணவீக்கத்தின் காலாண்டு சராசரி முறையே (-1.1)% உம் மற்றும் 0.8% வீதமாகவும் பதிவாகியுள்ளதுடன், அது தொடர்ச்சியான இரண்டு காலாண்டுகளுக்கான பணவீக்க இலக்குக்கு சதவீதம் 2 இக்குக்கீழ் நிலவுகின்றது. அதனால், இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 26(5) ஆம் பிரிவின் கீழ் நிதி விடயதான அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதன்மைப் பணவீக்கம் தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Related Articles