யுத்தம் முடிவடைந்து 18 வருடங்கள் கடந்த போதிலும், இதுவரை மின்சார வசதிகளின்றிப் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா மாவட்டத்தின் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு உடனடியாக மின்சார இணைப்பை வழங்குவதற்கு அரசாங்கத்தின் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் மின்சாரச் சேவை தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கும் நோக்கில், எரிசக்தி பிரதி அமைச்சர் அர்க்கம் இலியாஸ் (Arkam Ilyas) அவர்களின் தலைமையில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மின்சார விநியோகத்தை வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன், இந்த வருடத்தில் மாத்திரம் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மின்சார விநியோகம் வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. எஞ்சிய குடும்பங்களுக்கும் விரைவில் மின்சாரம் வழங்குவது குறித்து 'இலெக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா' (Electricity Distribution Lanka) நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், மக்களுக்கு வினைத்திறனான மற்றும் நம்பகமான மின்சார விநியோகத்தை வழங்கும் நோக்கில் 15 வீதிகளில் புதிய மின்சாரக் கட்டமைப்புக்களை நிர்மாணிப்பதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ளுதல், மின்சார இணைப்புகளைப் பெற்றுக்கொள்ள நிதி வசதியற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல், மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் 32 புதிய மின்மாற்றிகளை (Transformers) நிறுவுதல் மற்றும் அனர்த்த காலப்பகுதியில் சேதமடைந்த குஞ்சுக்குளம் பாலத்தை அண்டிய மின்சாரக் கட்டமைப்பை உடனடியாகப் புனரமைப்புச் செய்தல் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.


