உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல, பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கையின் பெண் பிள்ளைகளையும் இளம் பெண்களையும் வலுவூட்டும் ஒரு முதன்மை தன்னார்வ நிறுவனமான இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தினால், ஜூலை 19 அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட "ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது விழாவில்" கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் கரங்களால் பெண் பிள்ளைகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இம்முறை விருது வழங்கும் விழாவில் சிறுமிகளின் ஒழுக்கம், நெகிழ்ச்சித்திறன், நேர்மைத்தன்மை மற்றும் பிறருக்குச் சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டி, 338 ஜனாதிபதி விருதுகளும் 12 பிரதமர் விருதுகளும் உள்ளடங்கலாக மொத்தமாக 350 விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர்,
பெண் சாரணர் இயக்கத்தின் பிரதான வலிமைகளில் ஒன்று, பின்னணி அல்லது திறமை என்னவாக இருப்பினும் சகல சிறுமிகளுக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதாகும். அதேபோன்று, பதவிகளுக்கும், அதிகாரங்களுக்கோ அன்றி, பொறுப்புணர்வுடன் செயலாற்றுவதும், பரஸ்பர பரிவுடன் செவிமடுப்பதும், பிறரின் நலனுக்காக உழைத்தலும் ஒரு உண்மையான தலைவரின் பண்புகளாகும்.
கடந்த காலத்தில் பெண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளே இருந்தன. ஆனால் இன்று அனைத்துத் துறைகளிலும் யுவதிகளுக்கும், பெண்களுக்கும் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அத்துடன், யுவதிகள் முன்னெப்போதையும் விட அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு யுவதிக்கும், பெண் பிள்ளைக்கும் முன்னுக்கு வருவதற்கும், முன்னேற்றமடைவதற்கும் சம வாய்ப்புகள் கிடைக்கப்பெற வேண்டும். இன்று இந்த நாடு இருக்கும் நிலையை விட, சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இளம் தலைவிகளாகிய நீங்கள் முன்வர வேண்டும்.
குறிப்பாக, தற்போதைய பொருளாதார மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு மத்தியில் நிலையான தேசிய முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்க வேண்டுமாயின், பொருளாதார வளர்ச்சி மாத்திரமன்றி, ஒழுக்கநெறியும் சமூகப் பொறுப்புணர்வும் கொண்ட பிரஜைகளை உருவாக்குவது இன்றியமையாததாகும். அதற்காக இலங்கை பெண்கள் சாரணர் இயக்கம் ஆற்றி வரும் பங்களிப்பானது பாராட்டத்தக்கதாகும், என பிரதமர் தெரிவித்தார்.
"தயாராக இருங்கள்" (Be Prepared) என்ற இலட்சிய நோக்கத்தை முன்னிலைப்படுத்தி இயங்கும் பெண்கள் சாரணர் இயக்கம், 1917 மார்ச் 21 ஆம் திகதி, கண்டி பெண்கள் உயர்தர பாடசாலையில் செல்வி ஜெனி கால்வர்லி கிரீன் அவர்களால் முதன்முதலாக இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. வயதுப் பிரிவுகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் சமனலி, குடா மிதுரி, பெண் சாரணர், ரேன்ஜர், இளம், விசேட திறமைகளுடைய மற்றும் சமூக பெண் சாரணர் என ஏழு பிரிவுகளின் ஊடாகச் செயற்படும் இவ்வியக்கத்தில், ஒரு பெண் சாரணர் பெறக்கூடிய மிக உயர்ந்த அங்கீகாரம் "ஜனாதிபதி விருது" ஆகும். தமது அடிப்படை சவால்கள், எழுத்துமூல மற்றும் நேர்முகப் பரீட்சைகள் மற்றும் 'பி.பி. சவால்' (BP Challenge) ஆகியவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பெண்சாரணர்கள் மாத்திரமே இந்த உயரிய பாராட்டினைப் பெறுவார்கள். ரேன்ஜர் பெண்சாரணர் பிரிவின் மிக உயர்ந்த அங்கீகாரமாகவே பிரதமர் விருது வழங்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின் தலைவி ஸ்வர்ணிகா பிடிகல, இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின் முதன்மை ஆணையாளர் கலாநிதி குஷாந்தா ஹேரத், ஜனாதிபதி பெண் சாரணர் ஆணையாளர் புஷ்பா பெரேரா, பிரதமர் பெண் சாரணர் ஆணையாளர் திருமதி அருணி கருணாரத்ன உள்ளிட்ட இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின் உயர் அதிகாரிகள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருதுகளைப் பெற்ற பெண் சாரணர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.


