தென்னை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் வட மாகாணத்தில் தென்னம் பொருட்கள் சார் உற்பத்தி முயற்சியாளர்களின் தொழில் முயற்சிகளை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் அவர்களின் தலைமையில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்து ரணதுங்க அவர்களின் பஙகுபற்றுதலுடன் 16.07.2026 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் அரசாங்கத்தினால் தென்னை முக்கோண திட்டத்தினை நோக்காக கொண்டு இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாக அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தென்னம் பொருட்கள் சார் உற்பத்திகளை அதிகரித்து அதிகமான ஏற்றுமதி வருமானத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கம் கருதி அரசாங்கத்தினால் பெருமளவு நிதி ஒதுக்கீடுகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் இலங்கைக்கு 1200 மில்லியன் தென்னை உற்பத்தி சார்பாக வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் 6% ஆன வருமானமானது வடமாகாணத்திலிருந்து பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இவற்றில் பெரும்பாலானவை தும்பு மற்றும் சிரட்டை ஆகியவற்றின் பெறுமதிசேர் உற்பத்திகள் மூலம் ஈட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இப்பெறுமதி சேர் உற்பத்திகளின் ஒப்பீட்டளவில் குறைவாக காணப்படுவதாகவும், எனவே அதனை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான நிதி,தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை சேவைகளை தென்னை அபிவிருத்தி அதிகார சபை வழங்கி சிறந்த ஏற்றுமதியாளர்களை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் அதற்காக தென்னை அபிவிருத்தி அதிகார சபையில் இன்னமும் பதிவு செய்யப்படாத ஏனைய உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களை அதிகார சபையில் பதிவுசெய்து, சபையால் வழங்கப்படும் மானிய மற்றும் சலுகை அடிப்படையிலான உதவிகளை பெற்று சிறுதொழில் முயற்சியாளர்கள் தமது வருமானத்தை அதிகரிக்க முடியுமென அதிகார சபை தலைவரால் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து தென்னம் பொருட்கள் சார் சிறு தொழில் முயற்சியாளர்கள் வணிகத்தை பதிவு செய்தவதிலுள்ள ஆவண பிரச்சினைகள், கடன்பெறுவதிலுள்ள இடர்பாடுகள், தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கேட்டறிந்த அதிகார சபை அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், தென்னை அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் கே.ஏ.என்.பி.கனுகலே, பிரதிப் பணிப்பாளர் விஜய இராமதாச, உதவிப்பணிப்பாளர் புஜ்பகாந்த, க்ளீன் ஸ்ரீலங்கா மாவட்ட செயலணியின் இணைப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், மற்றும் அதிகார சபை அதிகாரிகள் ,உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக துறைசார்ந்த உத்தியோகத்தர்கள், சிறுதொழில் முயற்சியாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


