அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் 75வது ஆண்டு நிறைவு விழா கொழும்பில்!

அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் 75வது ஆண்டு நிறைவு விழா கொழும்பில்!
  • :

அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் பவள விழா (75வது ஆண்டு நிறைவு) எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி காலை 8.30 மணி முதல் கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம். சரூக் தெரிவித்தார்.

இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

மேலும், 1951 ஆம் ஆண்டு சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எச். அப்துல் அஸீஸ் அவர்களினால் காலியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்வி இயக்கம், இன்று நாட்டின் 23 மாவட்டங்களில் 650-க்கும் மேற்பட்ட பாடசாலைகளுடன் விரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அத்துடன், இந்நிகழ்வானது, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளதாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம். எப். எம். பாஹிம் தெரிவித்தார்.

இவ்விழாவில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் அவர் தெளிவு படுத்துகையில்..

* 25 வருடங்களுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 220 அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவித்தல்.

* அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற அஹதிய்யா தேசியப் பரீட்சைகளில் முதல் 10 இடங்களைப் பெற்ற திறமைமிக்க மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தல்.

* தபால் திணைக்களத்தின் அனுசரணையோடு தயாரிக்கப்பட்டுள்ள 75வது ஆண்டு நிறைவு விசேட நினைவுத் தபால் முத்திரை மற்றும் முதலாம் நாள் உறை உத்தியோகபூர்வமாக வெளியிடல்.

* வரலாற்று சிறப்புமிக்க 75வது ஆண்டு நிறைவு நினைவு மலர் வெளியிடல்.

என்பன இடம்பெற உள்ளதாகவும் அவர் தெளிவு படுத்தினார்.

மேலும், இறைபற்றுள்ள, ஒழுக்கமான மற்றும் சமூகப் பொறுப்புள்ள பிரஜைகளை உருவாக்கும் உயரிய நோக்கத்துடன் பயணிக்கும் அஹதிய்யா இயக்கத்தின் வரலாற்றில் இந்த விழா ஒரு முக்கிய மைல்கல்லாக அமையவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles