அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு முறையான விவசாயத் தரவுக் கட்டமைப்பொன்றின் அவசியம் துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்து

அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு முறையான விவசாயத் தரவுக் கட்டமைப்பொன்றின் அவசியம் துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்து
  • :

நெல் கொள்வனவு செயன்முறை மற்றும் நாட்டின் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

 பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், விவசாய உற்பத்திக்கும் சந்தைத் தேவைக்கும் இடையிலான சமநிலையின்மையைக் குறைப்பதற்காகத் துல்லியமான தரவுக் கட்டமைப்பொன்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

 

பயிரிடப்படும் பயிர் வகைகள், பயிரிடப்படும் அளவுகள் மற்றும் சந்தைத் தேவைகள் தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம், மேலதிக உற்பத்தி மற்றும் விலை தொடர்பான பிரச்சினைகளைக் குறைத்து, விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்க முடியும் என இங்கு குறிப்பிடப்பட்டது.

 

அரிசி உற்பத்தியைப் பொறுத்தவரையில் சம்பா, கீரி சம்பா, நாடு மற்றும் சிவப்பு அரிசி போன்ற அரிசி வகைகளின் உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகள் தொடர்பிலும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. சந்தைத் தேவைக்கு ஏற்ப உற்பத்தியைத் திட்டமிடுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையிலான தரவுப் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

 

இதேவேளை,  பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் கோரிக்கைக்கு அமைய, 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுtதவிசாளரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவும் பரிசீலிக்கப்பட்டது.

 

இக்கூட்டத்தில்  பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, கிட்ணன் செல்வராஜ் மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோரும், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

-----------------

 

Related Articles