இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை ஒழுங்குமுறைப்படுத்தல், இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் நலனோம்புகையைப் பாதுகாத்தல் மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பதற்காக 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழில் வாய்ப்புத் துறையின் சமகாலப் போக்குகளுக்குப் பொருத்தமான வகையில் பதிலளிப்பதற்கும் மற்றும் தேசிய முன்னுரிமைகள் மற்றும் சர்வதேச தரநியமங்களுக்கு இணங்கியொழுகும் வகையில் தற்போதுள்ள நியதிச்சட்ட பணிமுறைச் சட்டகத்தை புதுப்பிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
இத்தேவைகளுக்கு 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தை நீக்கி புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான சட்ட ரீதியானதும் நிறுவன ரீதியானதுமான பணிமுறைச் சட்டகத்தை புதுப்பிப்பதற்கும் பலப்படுத்துவதற்குமான கருத்தாக்கப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த கருத்தாக்கப் பத்திரத்தின் அடிப்படையில், 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு இயலுமை கிட்டும் வகையில் சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞக்கு ஆலோசனை வழங்குவதற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


