2026 சிறு போகத்திற்கான அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவுத் திட்டம் ஆரம்பம் 

2026 சிறு போகத்திற்கான அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவுத் திட்டம் ஆரம்பம் 
  • :

நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக 2026 சிறு போகத்திற்கான அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு செய்யும் திட்டம் இன்று (13) அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

 

அதன்படி, விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் உள்ள நெல் உற்பத்திப் பிரதேசங்களை உள்ளடக்கியதாக இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 

இன்று 13 ஆம் திகதி நெல் கொள்வனவிற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகள் திறந்து வைக்கப்பட்ட இடமாக வவுனியா மாவட்டத்தின் வெளிப்பொல, கிளிநொச்சி மாவட்டத்தின் பன்னன்கண்டி, முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லியாவல, மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு, திருகோணமலை மாவட்டத்தின் கோமரன்கடவலை மற்றும் அம்பாறை மாவட்டத்தில் லாஹுகல, மாந்தோட்டம் , கருன்காடு, அல்முனீரா, மிஹிந்துபுர, பாலம் முகாம் மற்றும் தமன ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள களஞ்சிய சாலைகள் அடையாளம் காணப்பட்டன. இதற்கு மேலதிகமாக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை வீரவில பிரதேசத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

 

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த, 2026 சிறு போகத்தில் கொள்வனவிற்காக அவசியமான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 

இம்முறை உரிய தரத்திற்கு இணங்க தயாரிக்கப்பட்டு நெல்லை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் , அதன்படி நாடு ஒரு கிலோ 120 ரூபாவிற்கும், சம்பா நெல் ஒரு கிலோ 130 ரூபாவிற்கும், கீரி சாம்பா நெல் 1 கிலோ 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

 

நெல் கொள்வனவிற்காக தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் 148 களஞ்சிய சாலைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், தேவைக்கு ஏற்ப மேலதிக களஞ்சிய சாலை வசதிகளை தனியார் துறை மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

 

அவ்வாறே, கடந்த போகங்களின் போது நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இருப்பில் ஒரு தொகை சதொச நிறுவனத்தின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் ஊடாக அரிசியாக மாற்றி சந்தைக்கு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

 

2026 சிறு போகத்தில் கொள்வனவுத் திட்டம் ஊடாக அரசாங்கத்தினால் 16,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த ஒதுக்கீட்டின் கீழ் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 6,000 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கையை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை திட்டமிட்டுள்ளது.

 

 

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles