ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தினைத் தலைமை வகிக்கும், போலந்துக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி, 2025 மே 28 முதல் 31 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சிகோர்ஸ்கி, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியும், ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவருமான காஜா கலாஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, போலந்து வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமரும், பேராசிரியருமான ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளதுடன், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல்களை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போலந்து வெளியுறவு அமைச்சருடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் போலந்துக் குடியரசின் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் வருகைதரவுள்ளனர். - வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு