- இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடத்தின் இறுதி கட்டத்தின் நிருமாணப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு ஆலோசனை
- பொதுமக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் நிலையமும் திறப்பு
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அண்மையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகள் உட்பட தற்போதைய செயற்பாடுகளைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
நாட்டின் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பை மிகவும் முறையானதாகவும் மற்றும் அதிக வசதிகளுடனும், நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளை வழங்கும் அடிப்படை நோக்கத்துடன் தற்போதைய சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ வின் கொள்கைக்கு இணங்க, சுகாதார அமைச்சினால் நாட்டின் வைத்தியசாலைக் கட்டமைப்பின் குறைபாடுகளைக் கண்டறிந்து, அங்கு காணப்படும் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வுகளை வழங்கி, கிராமிய மக்களுக்கு உயர் தரத்திலான மற்றும் முறையான சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்திற்கு இணங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அண்மையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகள் உட்பட தற்போதைய செயற்பாடுகளைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதன்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு வருகைதரும் நோயாளிகள் தமது முறைப்பாடுகளைத் தெரிவித்தல், அந்த முறைப்பாடுகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குதல் மற்றும் வைத்தியசாலை செயற்பாடுகள் தொடர்பாக நோயாளிகளுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் உதவி வழங்கும் நோக்கில் வைத்தியசாலையின் நிருவாகக் கட்டடத்தில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் நிலையம் (Public Relation and Information Centre) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசோல குணவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த வருடத்தில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 300 மில்லியனுக்கும் அதிகமான நிதி உதவியின் கீழ் 360 நோயாளர் கட்டில்கள், 10 அதி தீவிர சிகிச்சை கட்டில்கள் மற்றும் 03 ஆய்வுக்கூடங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்ட அறுவை சிகிச்சை பிரிவின் தற்போதைய நிலைமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கண்காணிப்பிற்கு உட்படுத்தியதுடன், அங்கு அறுவை சிகிச்சை பிரிவினால் வழங்கப்படும் நோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் அதனை உயர்தரத்தில் முன்னேற்றுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
அவ்வாறே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் 2018 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் ஒதுக்கீட்டின் கீழ் நிருமாணிக்கப்பட்ட ஐந்து மாடி இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக் கட்டடத் தொகுதியின் இறுதிப் பகுதியின் நிருமாணப் பணிகளின் முன்னேற்றத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மேற்பார்வை செய்தார்.
அதன்போது நிருமாணப் பணிகளை ஒவ்வொரு தளத்திற்கும் சென்று மேற்பார்வை செய்த பணிப்பாளர் நாயகம், இக்கட்டடப் பணிகளை விரைவுபடுத்தி, முழுமையாகக் கட்டடத்தைப் பூர்த்தி செய்து மக்கள் பாவனைக்கு வழங்குவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளர் உட்பட அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்கு இதன்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வைத்தியசாலையின் உள்ளக மருந்தகம், சமையலறை, மருத்துவம் வழங்கும் பிரிவுகள், மருந்துக் களஞ்சியசாலை, நோயாளர் சிகிச்சை விடுதிகள் மற்றும் ஆய்வுகூடங்களை மேற்பார்வை செய்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருந்துப் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக லொறி ஒன்றை எதிர்காலத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
வைத்தியசாலையின் கண்காணிப்பின் போது வைத்தியசாலையில் காணப்படும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக வைத்தியசாலையின் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர்கள், திட்டமிடல் மற்றும் தரப்பிரிவுகளின் மருத்துவ அதிகாரிகள், பிரதான கணக்காளர் மற்றும் வைத்தியசாலையின் செயலாளர் உட்பட வைத்தியசாலையின் முகாமைத்துவத்துடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
அத்துடன், அங்கு வைத்தியசாலையின் பிரிவுகளுக்காக போதிய இட ஒதுக்கீடுகள் இன்மை, அவசர அபாய மற்றும் அவசர சிகிச்சை (Accident and Emergency Unit) பிரிவுகளின் 4 மற்றும் 5 ஆம் தளங்களின் (மாடிகளின்) வேலைகளைப் பூர்த்தி செய்தல், தற்போது காணப்படும் பாழைய கட்டடங்களில் இருந்து புதிய கட்டடங்களுக்கு விடுதிகளை மாற்றுதல், திராய்மடு கழிவு சேகரிப்பு மத்திய நிலையத்தில் கழிவு முகாமைத்துவ பிரச்சினை மற்றும் அண்மைக்காலத்தில் உருவான இடையூறுகள், மனிதவளப் பற்றாக்குறை என்பன போன்ற விடயங்கள் குறித்து வைத்தியசாலையின் பணிப்பாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு தெளிவுபடுத்தினார்.
வைத்தியசாலைக்கான அவசர தேவையாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்ட லெபரொஸ்கோபி மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் என்பவற்றை வழங்குவதற்கு எதிர்காலத்தில் அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே. கணேசலிங்கம், பிரதிப் பணிப்பாளர்களான வைத்தியர் மைதிலி பார்தொலோட், வைத்தியர் கே. மோகனகுமார், வைத்தியசாலை செயலாளர் வி. கிருஷ்ணகுமார், பிரதான கணக்காளர் எஸ். புவனேஸ்வரன், ஆகிய அதிகாரிகள் உட்பட விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட வைத்தியசாலையின் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.