சுகாதாரத் தொழிலாளர்களின் தொழில் சார்ந்த திருப்தி, நாட்டின் மக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் உயர்தர சுகாதார சேவையை வழங்க உதவும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவையின் தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில், சுகாதாரத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில் சார்ந்த பிரச்சினைகளை ஆராய்ந்து, அவர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்வைத்த தொழில் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகள் மிகவும் நியாயமானவை என்று கூறிய அமைச்சர், அந்த பிரச்சினைகளுக்கு விரைவாகவும் நியாயமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் தங்கள் பொறுப்பை முறையாக நிறைவேற்றுகிறார்கள் என்றும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கண்டு, அவர்களுடன் பரஸ்பர புரிதலுடன் செயல்படுவதன் மூலம் வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை குறைக்க முடியும் என்றும் சுகாதார அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.