இளைஞர்களின் குரலுக்கு உலகளாவிய அங்கீகாரம்: ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பேரவையில் (UNEA-7) இலங்கைக்குக் கிடைத்த வெற்றி
"இளைஞர்கள் என்பவர்கள் நாளைய தலைவர்கள் மாத்திரமல்ல; இன்றைய தினத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் உண்மையான கதாநாயகர்களும் அவர்களே ஆவர்."
இளைஞர்களின் இந்தச் சுறுசுறுப்பான பங்களிப்பை உலகளாவிய ரீதியில் வலுப்படுத்துவதற்காக இலங்கை சர்வதேச அரங்கில் எடுத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளது.
2025 டிசம்பர் மாதத்தில், கென்யாவின் நைரோபியிலுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பேரவையின் ஏழாவது அமர்வில் (UNEA-7), இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் ஒன்று ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உலகளாவிய சுற்றுச்சூழல் உரையாடலும் UNEA-7 அமர்வும்
186 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 6,000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த வாராந்த பேரவையானது, முக்கியமாக 'முத்தரப்பு கிரக நெருக்கடி' (Triple Planetary Crisis) எனப்படும்: பருவநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றுக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதில் கவனம் செலுத்தியது. உறுப்பு நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட 18 தீர்மானங்களில் 11 தீர்மானங்களை ஏற்றுக்கொண்டதுடன், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான UNEP இன் நடுத்தர கால மூலோபாயத்திற்கும் ஒப்புதல் அளித்து இம்மாநாடு நிறைவடைந்தது.
இலங்கையின் தீர்மானமும் அதன் முக்கியத்துவமும்
இந்த மாநாட்டில், "சுற்றுச்சூழல் நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழல் கல்வியில் இளைஞர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பை மேம்படுத்துதல்" (Enhancing the Meaningful Participation of Youth in Environmental Action and Environmental Education) என்ற தலைப்பில் இலங்கை சமர்ப்பித்த தீர்மானம் சர்வதேச சமூகத்தின் பெரும் பாராட்டைப் பெற்றது.
தற்போதைய மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காடழிப்பு, நிலச் சீரழிவு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் விளைவாக சிறுவர்களும் இளைஞர்களும் பெரும் பாதிப்புகளுக்கு
உள்ளாகின்றனர். அதற்கமைய, இந்தத் தீர்மானம்:
• சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதிலும் அவற்றுக்குத் தீர்வு காண்பதிலும் எதிர்காலப் பிரதிநிதிகளாக இளைஞர்களின் முக்கிய பங்கை உத்தியோகபூர்வமாக வலியுறுத்துகிறது.
• உலகளாவிய மற்றும் தேசிய சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கை மையக் காரணியாக வலுப்படுத்துகிறது.
• UNEP இன் 'சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான முக்கிய குழுவின்' (CYMG) பங்களிப்பை
அங்கீகரிப்பதுடன், இளைஞர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் சாதகமான சூழலை உருவாக்குவதன் அவசியத்தை அடையாளப்படுத்துகிறது.
சர்வதேச வெற்றியைத் தேசிய நடவடிக்கையாக மாற்றுதல்
சர்வதேச சமூகத்தினால் இந்தத் தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுச்சூழல் அமைச்சு இதனை நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, சுற்றுச்சூழல் அமைசும், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைசும் இணைந்து, நாடு தழுவிய ரீதியிலுள்ள இளைஞர் கழகங்களின் (Youth Clubs) வலையமைப்பின் ஊடாக இளைஞர் தலைமுறையினரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் நேரடியாக ஈடுபடுத்துவதற்குப் பணியாற்றி வருகின்றன. இத்திட்டமானது ஒரு நிலையான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


