நேற்று(04 ஜூலை) காலை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக, இலங்கை விமானப்படை (SLAF) விசேட சமூக சிரமதான நிகழ்ச்சியொன்றை முன்னெடுத்து தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இணைந்தது.
சுகாதார அமைச்சின் தலைமையில் முன்னெடுக்கப்படும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பில் முப்படையினரின் செயற்பாட்டு பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் நாடளாவிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, இலங்கை விமானப்படையினர் பெலவத்தை சந்தியிலிருந்து கின்னதெனிய வரையிலான பிரதான வீதியிலும், குவன்புர (Guwanpura) குடியிருப்புப் பகுதியிலும், கொக்கலை பிரதேசத்திலும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இச்சமூக சேவை நிகழ்ச்சியின் போது, டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அகற்றப்பட்டதுடன், அடைத்திருந்த வடிகால் அமைப்புகள் சுத்தம் செய்யப்பட்டு, பொது இடங்களைச் சூழ்ந்திருந்த புதர்கள் மற்றும் கட்டுப்பாடற்ற வகையில் வளர்ந்திருந்த தாவரங்களும் அகற்றப்பட்டன.


