இலங்கையை உலகில் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் - The Innovation Island Summit – 2025 மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையை உலகில் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் -  The Innovation Island Summit – 2025 மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு
  • :

புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இதற்காக புத்தாக்கத் துறையில் ஒரு பெரிய மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.கொழும்பில் உள்ள ITC ரத்னதீப ஹோட்டலில் நேற்று (20) நடைபெற்ற The Innovation Island Summit - 2025 மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கையில் Innovation Island Summit - 2025 மாநாட்டை நடத்துவதால், இந்த நாட்டில் புதிய தொழில்முனைவோரின் புத்தாக்க ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் பிரதிபலிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மனித நாகரிகத்தின் பல்வேறு நிலைகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம் என்றும், அந்த மனித நாகரிகத்தின் ஒவ்வொரு புதிய அத்தியாயமும் புத்தாக்கத்தின் மூலம் எழுதப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

எப்போதும் மனித நாகரிகத்தை புதிய நிலைக்கு உயர்த்துவதில் புத்தாக்கங்கள் வகிக்கும் பங்கு மிக முக்கியமானது என்றும், மக்களின் தேவைகள் மாறவில்லை என்றாலும், அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதம் மாறிவிட்டது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

புதிய தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதன் மூலம் சந்தை உருவாக்கப்படுகிறது என்றும், தேவைகளைப் பூர்த்தி செய்யும் மாதிரி மாறினால் மட்டுமே புதிய சந்தை உருவாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாறிவரும் மாதிரியை அடையாளம் கண்டு அதனை அடைந்து கொண்டதால் தான் உலக நாடுகள் வெற்றி பெற்றுள்ளன என்றும், அண்டை நாடான இந்தியா இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் ஜனாதிபதி கூறினார்.

நமது நாட்டில் புத்தாக்கங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் இருப்பதாகக் கூறிய ஜனாதிபதி, 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை டிஜிட்டல் மயமாக்கலின் புதிய பாதையை நோக்கி அழைத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் புத்தாக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய கண்டுபிடிப்புகள் வணிகமயமாக்கலுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இந்த ஆண்டு 19 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருவாயை எதிர்பார்ப்பதாகவும், அந்த ஏற்றுமதி வருவாயை அடைய, புத்தாக்கத் துறையில் ஒரு பெரிய மாற்றம் தேவை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

புத்தாக்கங்களின் பலன்களை முழு மக்களுக்கும் கொண்டு செல்லும் சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று கூறிய ஜனாதிபதி, அரசாங்கம் விரும்பும் பல இலக்குகள் புத்தாக்கங்களுடன் இணைந்திருப்பதாகவும் கூறினார்.

உலகளாவிய பொருளாதாரப் போட்டியில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புத்தாக்கத்தின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். சர்வதேச பங்காளிகள் மற்றும் முதலீட்டாளர்களை நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி இலங்கைக்கு புதிய முதலீடுகளைக் கொண்டு வருமாறும் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் புத்தாக்கம் மற்றும் வணிகத்திற்கான சாதகமான சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான திறமையான தொழிற்படை நம் நாட்டில் இருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]