"இலங்கையின் படகு உற்பத்தித் தொழில்துறையை புதிய அந்நியச் செலாவணியை ஈட்டும் பிரதான பொருளாதாரத் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது" - தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி.
நாட்டின் மீன்பிடித் துறையை மேம்படுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது பல நாள் மீன்பிடி படகு இறங்குதளம், அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நேற்று (11) பேருவலையில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிச் செயற்பாட்டில் ஒரு முக்கிய ஏற்றுமதித் துறையாக இனங்காணப்பட்டுள்ள படகு உற்பத்தித் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் முதலாவது படகு இறங்குதளம் (Boat Launching Yard) இதுவாகும்.
76 மில்லியன் ரூபாய் செலவில் பேருவலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தத் தளத்தின் ஊடாக நாட்டில் பல நாள் மீன்பிடிப் படகு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் படகு உற்பத்தியாளர்களின் வருமானத்தை உயர்த்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.


