தொழில் மற்றும் தொழில்முயற்சி மேம்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில்முயற்சி மேம்பாட்டு அதிகாரசபை (NEDA), பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இலங்கையின் நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் (MSMEs) துறையை வலுப்படுத்துவதற்கான தேசிய மாநாட்டை அண்மையில் (10) கொழும்பு மாவட்ட செயலகத்தில் தொழில் மற்றும் தொழில்முயற்சி மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் நடத்தியது.
“இலங்கையின் நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை (MSMEs) வலுப்படுத்துதல்: சவால்கள், வாய்ப்புகள் மற்றும் எதிர்காலப் பாதை” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில், இலங்கையின் MSME துறையை வலுப்படுத்துவதற்கான உத்திகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக MSME கருதப்படுகிறது. இது வேலைவாய்ப்பு உருவாக்கம், புத்தாக்கம், பிராந்திய அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. எவ்வாறாயினும், அண்மைக்கால பொருளாதார சவால்கள் காரணமாக இத்துறை பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், அதிலிருந்து மீள்வதற்கு கொள்கை ரீதியான மற்றும் வலுவான நிறுவன ரீதியான ஆதரவு அவசியமாகியுள்ளது.
அதற்கமைய, இம்மாநாட்டின் மூலம் கொள்கை வகுப்பிற்கு வசதியளித்தல், போட்டித்தன்மை மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை மேம்படுத்தக்கூடிய உத்திகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.


