இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சட்டவாக்கம் மற்றும் கொள்கை நடைமுறைப்படுத்தல்களை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இயலாமையுடைய நபர்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், இலங்கையில் இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சட்டவாக்கம் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலும், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே ஃபிராஞ்சே அவர்கள், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை நிறுவியமைக்காக பாராளுமன்றத்திற்கு பாராட்டு தெரிவித்ததுடன், இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய அபிவிருத்தியை அனைத்து துறைகளிலும் தேசிய முன்னுரிமையாகக் கருதுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். சட்ட மறுசீரமைப்பு, அணுகல் வசதிகள், கல்வி, வேலைவாய்ப்புகள், சமூக மட்டத்திலான புனர்வாழ்வு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் நிறுவன ரீதியான ஆதரவையும் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
யுனிசெஃப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி பெகோனா அரெலானோ அவர்கள் குறிப்பிடுகையில், விசேடமாக சுகாதாரம், போஷாக்கு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இயலாமையுடைய சிறார்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், ஊனமுற்ற நபர்களை உள்ளடக்கிய கொள்கைகளை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்திற்குள்ள கண்காணிப்புப் பொறுப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், UNFPA, UNDP, ILO மற்றும் UN Volunteers நிறுவனங்களின் பிரதிநிதிகள், இளைஞர் விவகாரங்கள், கல்வி, இயலாமை நிலையிலுள்ள நபர்கள் தொடர்பான தரவுகளைச் சேகரித்தல், வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக உள்ளடக்கம் தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து ஒன்றியத்தைத் தெளிவுபடுத்தினர்.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான சட்டமூலமும் சைகை மொழி தொடர்பான சட்டமூலமும் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்தச் சட்டமூலங்களை 2026 செப்டெம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்க நிறுவனங்களில் அணுகல் வசதிகளை மேம்படுத்துதல், ஊனமுற்ற நபர்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் ஊனமுற்ற மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் இந்த வருடத்திற்குள் ஊனமுற்ற சிறார்களுக்காக பத்து பகல்நேர பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோன்று, அரசாங்க அமைச்சுக்களின் ஊடாக ஊனமுற்ற நபர்களை உள்ளடக்கிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைத் தயாரித்தல், தேசிய ஊனமுற்றோர் தரவுத் தொகுதியை நிறைவு செய்தல் மற்றும் ஊனமுற்ற நபர்கள் தொடர்பான செய்தி அறிக்கையிடலில் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையை ஊக்குவிப்பது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியொன்றை நடத்துதல் உள்ளிட்ட எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தின் கவனம் செலுத்தப்பட்டது.
கலந்துரையாடலின் நிறைவில், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சுகத் வசந்த டி சில்வா அவர்கள், ஒன்றியத்தின் கருப்பொருளான “தடையற்ற சமூக வாழ்க்கை” என்பதை மீண்டும் வலியுறுத்தியதுடன், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஊனமுற்ற நபர்களை உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில், ஒன்றியத்தின் கௌரவ பிரதித் தலைவர்களான கயந்த கருணாதிலக்க மற்றும் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கௌரவ கலாநிதி உபாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினர்கள், அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், UNFPA, UNICEF, UNDP, ILO மற்றும் UN Volunteers நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


